ஆசிரியர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் - அவர்களிடமா இந்த வன்முறை? - தமிழக DGP சைலேந்திர பாபு அதிரடி Video - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 27, 2022

ஆசிரியர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் - அவர்களிடமா இந்த வன்முறை? - தமிழக DGP சைலேந்திர பாபு அதிரடி Video

 



அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.


தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில், " அரசுப்பள்ளி மாணவர்களுக்கு: பள்ளிக்கூடம்தான் நமது வாழ்வாதாரம், ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை?" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:


மாணவர்களுக்கு வணக்கம்! இரண்டு காணொளிகளைப் பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார். இன்னொரு இடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேசை மற்றும் நாற்காலியை மிகவும் சிரமப்பட்டு உடைக்கின்றனர். பாரதியார் சொன்னது போல் “நெஞ்சு பொருக்குதில்லையே” என்ற சூழ்நிலையில் இந்தப் பதிவை இடுகிறேன்.


அரசுப் பள்ளி மாணவர்களே! நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நமது பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளிக்கு அனுப்புகின்றனர் என்பதை யோசித்து பார்த்துள்ளீர்களா? அவர்களிடத்தில் பெரிய வருமானம் கிடையாது. அதாவது அவர்களிடத்தில் அதிகமான சொத்துக்கள் கிடையாது. வருமானமில்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கு சொத்துக்கள் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். உங்களின் பெற்றோர்களுக்கு தான் சொத்துக்கள் கிடையாது. ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது. நிறைய ஆதாரங்கள் உள்ளது. அது என்ன ஆதாரம், என்ன சொத்து என்று பார்த்தீர்கள் என்றால், அரசுப் பள்ளி இருக்கிறது அல்லவா! அது தான் உங்கள் சொத்து. அங்கு ஒரு விளையாட்டு மைதானம் இருக்கிறது அல்லவா! அது தான் உங்கள் சொத்து, அங்கு வகுப்பறை இருக்கிறது அல்லவா! அது தான் உங்கள் சொத்து. அங்கே இருக்கின்ற மேசை மற்றும் நாற்காலியும் தான் உங்கள் சொத்து.


நாங்கள் பள்ளியில் படிக்கும் போது மேசை மற்றும் நாற்காலிகள் இல்லை. தரையில் தான் அமர்ந்து படித்தோம். ஆனால் அரசு உங்களுக்கு அதுபோன்ற வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. அந்த மேசையை தான் நீங்கள் உடைக்கின்றீர்கள். அங்கு அமர்ந்திருக்கும் ஆசியரியர் தான் உங்கள் சொத்து. அதுபோன்ற ஆசிரிய பெருமக்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். இந்த காவல் துறை தலைமை அலுவலகத்தில் இப்பதவியில் அவர்களால் தான் அமர்ந்துள்ளேன். அப்படிப்பட்ட ஆசிரியரை அடிப்பதற்கு ஒரு மாணவர் கை ஓங்குகின்றான். ஏன் இதுபோன்று நிலைமைகள் ஏற்படுகின்றன என்பது எனக்கு சரியாக தெரியவில்லை.


ஆனால் இந்த ஆசிரியர்கள் தான் நமக்கு கணிதம் கற்பிப்பார்கள். இந்த ஆசிரியர்கள் தான் நமக்கு அறிவியல் கற்பிப்பார்கள். இந்த ஆசிரியர்கள் தான் நமக்கு புவியல் கற்றுக் கொடுப்பார்கள். இந்த ஆசிரியர்கள் கடந்த 3000 ஆண்டு மனித வரலாற்றைப் பற்றி கற்றுக் கொடுப்பார்கள். இவர்கள் தான் கணினி கற்றுத் தருவார்கள். இவர்கள் தான் விளையாட்டு கற்றுக் கொடுப்பார்கள். அப்போது இவர்கள் தான் நமக்கு ஆதாரம். இவர்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து என்றிருக்கையில் அறிவையும், செயல் திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏன் செய்கின்றனர். இச்செயலானது நமது வீட்டையே நாம் தீ வைத்து எரிப்பதற்கு சமமானதாகும். நமது கை, கால்களையே வெட்டிப் போடுவது போன்றதாகும். இந்த கை, கால் மற்றும் மூளை இருந்தால்தான் பிற்காலத்தில் வேலை பார்க்க முடியும். இது உங்கள் ஆதாரங்களையே அழிப்பது போன்றதாகும். தயவு செய்து இது போன்ற செயல்களை செய்யாதீர்கள்.


நாம் பள்ளிக்கூடத்திற்கு மிகப் பெரிய நோக்கத்தோடு வருகின்றோம். இங்கே தான் நீங்கள் முழு மனிதராகவும், சிந்தனையாளராகவும், ஆற்றல் படைத்தவராகவும், உங்களை நீங்களே தயார் செய்ய வேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக் கூடம். அந்த இடத்திற்கு மிகப் பெரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆசிரிய பெருமக்களை உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனநிலை மாற வேண்டும்.


இப்படி பள்ளி கூடத்தில் வன்முறை செய்யக்கூடியது என்பது சட்டப்படியும், JJ Act –ன் படியும் இது ஒரு குற்றமாகும். சட்டம் உங்களுக்கு சில பாதுகாப்பு கொடுத்திருந்தாலும் இது ஒரு குற்றமாக தான் கருதுகிறார்கள். தயவு செய்து இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள்" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.








Post Top Ad