அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பா? - திட்டமிட்ட சதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 27, 2022

அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பா? - திட்டமிட்ட சதி

 





 தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், வீடுகளில் முடங்கிய மாணவர்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஒழுக்கக் கேடானா செயல்களில் ஈடுபடுகின்றனர்.  உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலம் மாணவர்கள் கையில். ஆனால், மாணவர்கள் எதை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள்? இதுதான் தமிழகத்தில் அனைவர் முன் நிற்கும் கேள்வி... தமிழகத்தில் எதிர்கால குடிமக்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.


அதன் வெளிப்பாடுதான் 2021-2022ம் ஆண்டுக்கு கல்வித்துறைக்காக ரூ. 32 ஆயிரத்து 599 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் உதவியால் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள், நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய கற்றல் முறைகளையும் புகுத்தி வருகிறது. இதன்  காரணமாக பள்ளிக் கட்டிடங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறதே தவிர மாணவர்கள் நிலை எதிர்திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு சாட்சியாக செல்போன்களில் அன்றாடம் வெளியாகும் வீடியோ காட்சிகள்.


வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் ஆசிரியரை சில மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கும்மி அடித்து கேலி செய்வது. வகுப்பறையில் ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே, ஒரு மாணவன் வகுப்பறையில் நாட்டியம் ஆடுவது, வகுப்பு ஆசிரியரை கத்தியை காட்டி மிரட்டுவது, வகுப்பறையில் உள்ள இருக்கைகளை உடைப்பது போன்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம். கொனோரா தொற்று பரவத் தொடங்கிய பிறகு தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கினர். இது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் தந்ததால், அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது தற்போதைய நிலவரப்படி பள்ளிகளில் இன்னும் கொலைச் சம்பவம் தான் நடக்கவில்லை. அதுவும் விரைவில் நடந்து விடுமோ என்று கல்வியாளர்கள், பெற்றோர் அச்சப்படுகின்றனர். அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் செயலும், மன நிலையும் மாறியுள்ளது. பொதுவாக, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் இடையே தான் இதுபோன்ற மனப்போக்கை காண முடிந்தது. இப்போது, அந்த மன நிலை பரிணாம வளர்ச்சி பெற்று பள்ளிகளிலும் தொற்றிக் கொண்டுவிட்டது.


இது குறித்து ஆசிரியர்கள் கூறுவது, மாணவர்கள் விஷயத்தில் ஆசிரியர்களின் கை கட்டப்பட்டுள்ளது. இதனால் யாரையும் கண்டிக்க முடியவில்லை. கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கிய பெரும்பாலான மாணவ மாணவியருக்கு போதிய வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் போனது, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பாடங்களை சரியாக கவனிக்காமல் போனது, வறுமை, வசதியின்மை போன்ற காரணங்கள்தான். இவை எல்லாவற்றையும் விட, கொரோனா காலத்தில் மாணவர்கள் கைகளில் செல்போன் வந்ததுதான். செல்போன்களில் கண்டதை பார்த்து தானும் அதுபோல செய்ய வேண்டும் என்ற ஆசையால் வழி தவறி மாணவர்கள் நடக்கின்றனர். இதை கண்டிக்க வேண்டிய பெற்றோர் கண்டிக்கவில்லை. சரியாக வழிகாட்டவில்லை.


தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தட்டுத் தடுமாறிப் படித்தாலும், 9ம் வகுப்புக்கு நுழையும் போது நல்ல முறையில் தயாராகி, பெரும்பாலும் 10ம் வகுப்பில் தங்களை கற்றலுக்கு முழுமையாக மாணவர்கள் தயாரித்துக் கொண்டு பொதுத் தேர்வு எ ழுதி தேர்ச்சி அடைகின்றனர். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது மாணவர்களுக்கு பயம் வரும். தங்களை திருத்திக் கொள்வார்கள். ஆனால் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கும் போது பயம் போய்விடுகிறது.


திருத்திக் கொள்ள முடியாத, திருந்த தயாராக இல்லாத மாணவர்கள் அதற்கு மேல் கல்வி நிறுவனங்களை எட்டிப்பார்க்கவே முடியாது. ஆனால் மீண்டும் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த வகை மாணவர்கள்  உரிய கற்றல் அடைவுகளோடு இல்லாத ஒருவன், ஒரே தர நிலையில் பிற மாணவர்களோடு இணைவது என்பது சிரமம். அதாவது, ஒரு குடத்துப் பாலில் ஒரு துளி விஷம் கலப்பதற்கு ஒப்பாகும். இதை உணராத வரையில் மாணவர்களுக்கு கல்வியின் ஆற்றல் புரியாது என்பதே நிதர்சனம்.


சமூக வலை தளங்களின் பிடிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள், தாயாக பார்க்க வேண்டிய பெண் ஆசிரியர்களை வேறாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். தந்தையாக பார்க்க வேண்டிய ஆசிரியர்களை  எதிரிகளாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவுதான் வகுப்பறைக்குள் கத்தியை கொண்டு வருகின்றனர். இது மாணவர்கள், ஆசிரியர்களின் பிரச்னையாக இல்லாமல், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசத்தின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை கல்வித்துறையும், மாணவர்களும்  உணர வேண்டும்.


பள்ளி மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற நடைமுறை வந்த பிறகு மாணவர்களிடம் இது போன்ற மனநிலை துளிர்விடத் தொடங்கிவிட்டதும் ஒரு காரணம். அதனால், ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும்,   பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடையே உருவாகியுள்ள சாதி, சமய, கல்வி போன்ற பிரிவினைகளும் இந்த செயல்கள் வளர்வதற்கு தூண்டுகோலாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை இருந்துவந்த நடைமுறைகளை மாற்றி, அனைத்து பொறுப்புகளும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி பள்ளிக் கல்வித்துறையில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் ஒவ்வொரு நாளும்  குழப்பம் தான். ஒவ்வொரு நாளும் மாறி ,மாறி உத்தரவுகள் வருகிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கள நிலவரங்களை அறியாத அதிகாரிகளால் பள்ளிகளை சீர்  திருத்த முடியாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்துக்கு பிறகு மாணவர்களின் குடும்ப சூழல், வருவாய் சூழல், போன்றவற்றை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுப்பதுடன், மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களுக்குரிய கவுன்சலிங்கையும் அளித்தால்  தான் மாணவர்களிடயே ஏற்பட்டுள்ள மன மாற்றங்களை ஒழுங்கு படுத்த முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


* தமிழகத்தில் 37554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 225400 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 5275203 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

* 1920ல் சென்னை மாகாண தொடக்க கல்வி சட்டம் கொண்டு வரப்பட்டது. 1921ல் சென்னை மாகாண தொடக்க நிலைக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தது. 1924ல் சில பகுதிகளில் கட்டாய இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.

* 1841ல் சென்னையில் முதல் முறையாக உயர்நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டது. 1849ல் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது.

* 1826ல் சர்தாமஸ் மன்றோ, பொதுக் கல்வி வாரியத்தை உருவாக்கி கல்வி முறையை ஒழுங்குபடுத்தினார்.

* பின்னர் 1854ல் பொதுக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது.

* 1855ல் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்பட்டது.

* 1995-1996ல் ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

* 1960ல் இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 1981ல் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டனர். 1985ல் 8ம் வகுப்புவரை இலவசப் பாடநூல், சீருடை வழங்குவது விரிவு படுத்தப்பட்டது.


* திட்டமிட்ட சதி

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில்  மாணவர்கள் சேர்ந்து வருவதால், அதை ஏற்க மறுக்கும் ஒரு சில கூட்டத்தார், இதுபோன்ற காட்சிகளை வேண்டும் என்றே செல்போன்களில் பரவவிட்டு அரசுப் பள்ளிகளின் மதிப்பை குறைக்க முயற்சிக்கின்றனர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால்,தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியர் தங்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் எங்களை அடிமைபோல நடத்துகின்றனர். எப்போது பார்த்தாலும் ‘எழுது, படி’ என்று துன்புறுத்துகின்றனர் என்று புலம்புகின்றனர். இது, ஒரே  பள்ளிக் கல்வியில் இரு வேறு நிலைகளை நாம் காட்டுகிறது.




Post Top Ad