தொடர் மழை - பாதுகாப்பு நடவடிக்கைகள் - ஆசிரியர்கள் செய்யவேண்டியது - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 8, 2021

தொடர் மழை - பாதுகாப்பு நடவடிக்கைகள் - ஆசிரியர்கள் செய்யவேண்டியது - Proceedings

 

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண். 3290/ ஆ1/ 2021, நாள் 08.11.2021 பொருள் பள்ளிக்கல்வி - அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும்

மாணாக்கர்களின் பாதுகாப்பு - தொடர் மழை முன்னெச்சரிக்கை - மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்- அறிவுரைகள் வழங்குதல் -சார்பாக.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்கென, பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 


1. தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்தஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். 


2. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். 


3. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது. 


4. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணர்வர்கள் அருகில் செல்லாவாறு கண்காணிக்க வேண்டும். 


5. விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்த்திட வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள். 


6. மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும் போதும் திரும்பிச் செல்லும் போதும் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் போது அவ்வழியினை தவிர்த்திட வேண்டும். 


7. பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்

8. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.

9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.


10. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக அகற்றப்படவேண்டும்.

11. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.

12. மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.

13. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


14. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள்

கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணாக்கர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.


15. மழைக் காலங்களில் தங்களை மழையில் இருந்து காத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும் அதனால் மாணவர்களுக்கு இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து ஆபத்து நேரிடக் கூடும் என அறிவுறுத்த வேண்டும்.


16. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை ஏற்கெனவே அறிவுறுத்தியபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். மேலும், காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப சுதாரநிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

17. மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, மாவட்டக்கல்வி அலுவலர் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணாக்கர்களின் பாதுகாப்பு குறித்து தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓம்/- XXXXXXXX முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர். 

பெறுநர் 
1.அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் 
2.அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்
நகல்
மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்.








Click Here To Download - School Safety Measures - Pdf




Post Top Ad