பிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 4, 2021

பிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி?

 

``பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும், வீடு வாங்கி இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியம் பெற இயலுமா?" 






Pradhan Mantri Awas Yojana


வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் ஆசை, சொந்தமாக ஒரு வீடு வாங்குவதுதான். சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டமே பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.



இதுதொடர்பாக வங்கித் துறை சார்ந்த அதிகாரிடம் பேசியபோது, "பொதுவாக, இந்த வட்டி மானியத்தைப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்குகின்றன. ஏற்கெனவே வங்கிக்கடன் பெற்று வீடு வாங்கி, தற்போது இஎம்ஐ கட்டிக்கொண்டிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியம் பெறமுடியாது. வீட்டுக்கடனுக்காக வங்கியை அணுகும்போது, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடனை வழங்கும்படி விண்ணப்பித்தால், அதற்கான தகுதியைப் பரிசீலித்தபின் வழங்குவார்கள்.



விண்ணப்பிக்க தகுதி:



விண்ணப்பதாரரின் குடும்பத்துக்கு வேறெங்கும் சொந்த வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்துக்குச் சொந்த வீடு தொடர்பாக இந்திய அரசின் வேறெந்த திட்டத்தின் பயனும் கிடைத்திருக்கக் கூடாது. திருமணமானவர்கள், தனியாகவோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ விண்ணப்பிக்கலாம். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.



எங்கெல்லாம் வீடு கட்டலாம்?



மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு/ புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும்விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. வீட்டுக்கு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத்தலைவரின் பெயரில் அந்த வீடு இருக்கும்பட்சத்தில், குடும்பத்தலைவியை துணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளிப்பவராகவோ காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.



வீட்டுக்கடனின் வகைகள்:



விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், வீட்டு விலை, வீட்டின் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்படும் வீட்டை நான்காகப் பிரித்துள்ளார்கள். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS); ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை குறைந்த வருவாயுள்ள பிரிவினர் (LIG); ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 1 (MIG I); ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 2 (MIG II) என்று பிரித்துள்ளனர்.





வீட்டுக்கடன் கணக்கிடும் முறை:


வீட்டுக்கடனுக்கான மானியத்தைக் கணக்கிடுவதற்கு வீட்டுக்கடன் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாயுள்ள பிரிவினருக்கு வீட்டுக்கான கடனில் 6 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில் கொள்ளப்படும். அதற்கு 6.5 சதவிகிதம், அதாவது 2,67,280/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும். நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 1-ஐச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கான கடனில் 9 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு, அதற்கு 4.0 சதவிகிதம், அதாவது 2,35,068/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும். நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 2-ஐச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கான கடனில் 12 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில்கொள்ளப்பட்டு, அதற்கு 3.0 சதவிகிதம், அதாவது 2,30,156/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும்.



அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அதிகபட்சமாக, ஆண்டு வருமானத்தைப்போல் ஐந்து மடங்கு தொகைவரை வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது வழக்கமாக வங்கிகள்தரப்பில் கேட்கப்படும் ஆவணங்களே இதற்கும் கேட்கப்படும்.



விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்குக்கே மானியத்தொகை அளிக்கப்பட்டுவிடும். மானியம் போக மீதமுள்ள தொகையை மட்டும் மாதத்தவணையாகச் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்தின்கீழ், வீட்டுக்கடனாக 20 லட்சம் ரூபாய் வரை பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 90 சதவிகிதம் வரை வங்கிக்கடன் அளிக்கப்படும். 10 சதவிகிதம் மட்டும் விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். 20 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாய்வரை வங்கிக்கடன் பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 80 சதவிகிதம் வரை வங்கிக்கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவிகிதம் தொகை, விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். 75 லட்சம் ரூபாய்க்குமேல் வங்கிக்கடன் பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 75 சதவிகிதம்வரை வங்கிக்கடனாக வழங்கப்படும். 25 சதவிகிதம் தொகை விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். முதன்முறையாக வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் அனைவருக்குமே இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." என்றார்.

Post Top Ad