அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 2, 2019

அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை



தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முன்னதாகவே மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒரே நாளில் 240 பேர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 1,608 இயங்கி வருகிறது. இதில் மேல்நிலைப்பள்ளிகள் 129, உயர்நிலைப்பள்ளிகள் 162, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் 1,161, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 156 இயங்கி வருகின்றன.

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி ஒன்று இயங்குகிறது. அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி முதல் பிளஸ்2 வரை, ஏப்ரல் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, நேற்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை நேற்று ஒரே நாளில் 240 மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் அளித்துள்ளனர்.


அதியமான்கோட்டை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில், மாணவிகள் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் தயாராக இருந்தனர். ஆனால், மாணவிகள் யாரும் வரவில்லை. எங்கள் பள்ளியில் விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கும்போது தான், மாணவிகள் சேருவார்கள் என தலைமை ஆசிரியர் அற்புதம் தெரிவித்தார். தர்மபுரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருவர் கூட சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கவில்லை. 

ஆசிரியர்கள் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணிக்கு சென்றுள்ளனர். குறைந்த ஆசிரியர்களே தற்போது பணியில் உள்ளனர். தேர்வு முடிந்த பின்னர் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்துசென்று, மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம் என, பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முதல் அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. குறிப்பாக எல்கேஜி, யுகேஜி முதல் பிளஸ்2 வரை மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 


சேர்க்கை பதிவின்போது, எல்லா சான்றிதழ்களையும் பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. பின்னாளில் வழங்கினால் கூட போதுமானது. மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பும் பிற நிபந்தனைகளும், வழக்கம்போல் பின்பற்றப்பட வேண்டும். 

பிளஸ் 1 சேர்க்கையை பொறுத்தமட்டில், மாணவர்கள் சேர்க்கையை ஏப்ரல் முதல் நாள் தொடங்கி கொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில், மாணவர்களுக்கு பிரிவு (குரூப்) உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சேர்க்கைக்கான வழிமுறைகளை பின்பற்றி அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும்,’ என்றனர்.

Post Top Ad