அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ] - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 16, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]



கல்வி துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும். அதில் தவறு நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.  இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: 


அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர் எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும். இந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால் தான்  பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்பாதது துரதிஷ்டவசமானது. இதற்கு காரணம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதில் உள்ள அக்கறையின்மைதான். 

 கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிப்பார்க்க வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால், பணியில் இருந்து அவர் விலகி கொள்ள வேண்டும். அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றித்தான் ஆக வேண்டும். 


எனவே, பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அரசுப் பள்ளிகளில் விரைவில் அமல்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சரிபார்க்க வேண்டும். தவறு நடந்ததாக தெரியவந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.

 அதிக சம்பளம், உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசு பள்ளியின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர். இதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Post Top Ad