Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - www.asiriyar.net செய்திகளை WhatsApp -ல் பெற 9597063944, 7200511868 எண்களில் எதாவது ஒரு எண்னை நீங்கள் Admin - ஆக உள்ள குரூப்பில் இணைக்கவும்

Search This Blog

விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு முழு ராசிப் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் - 14.4.2019 முதல் 13.04.2020 வரை
மங்களகரமான விகாரி வருடம் கோலாகலமான வசந்த ருதுவில், உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 மணி 06 நிமிடத்துக்கு 14.04.2019-ல் சுக்ல பட்சத்து தசமி திதியில், கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியிலும், சூலம் நாமயோகத்திலும், தைதுலம் நாமகரணத்திலும், சூரியன் ஓரையில், நேத்திரம் ஜீவன் நிறைந்த, பஞ்சபட்சிகளில் ஆந்தை துயிலுறும் நேரத்தில், புதன் மகா தசையில் சூரியன் புத்தியில், குரு அந்தரத்தில் மங்களகரமான விகாரி வருடம் பிறக்கிறது.

விகாரி வருடத்திய பலன் வெண்பா

“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்

பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்

தியவுடமை விற்றுண்பார் தேர்”

என்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடலின்படி இவ்வருடத்தில் குறைவாக மழை பொழியும், பூமியில் நீர் மட்டம் குறையும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தானியங்களின் விலை அதிகரிக்கும். திருட்டுப் பயம் கூடுதலாகும். சிலர் பூர்விகச் சொத்துக்களை விற்க வேண்டி வரும். ஆனாலும் சந்திரனின் லக்னம், ராசியான கடகத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஓரளவு மழை உண்டு. நாட்டின் மேற்குப் பகுதியில் மழை இருக்கும்.இந்த வருடத்தின் ராஜாவாக, அர்க்காதிபதியாக, மேகாதிபதியாக, சேனாதிபதியாகவும் சனிபகவான் வருவதால் உலகெங்கும் கூச்சல், குழப்பம் அதிகமாகும். மதக்கலவரங்கள் ஏற்படும். இளைஞர்கள், மாணவர்கள் மொழி, இன அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவர்.

ராஜாவாக சனி வருவதால் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை அரசியல் குழப்பங்கள், தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள், மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி உண்டாகும். தங்கத்துக்குரிய கிரகம் குரு, சனியுடன் சேர்ந்திருப்பதால் தங்கக்கடத்தல் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி விலை உயரும். பங்குச் சந்தையும் நிலையில்லாமல் இருக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல், இயற்கை உணவு, மருந்து ஆகிய துறைகளில் பங்குகளின் விலை உயரும்.

செல்லப் பறவைகளை வினோத நோய் தாக்கும். மேகாதிபதியாக சனி வருவதால் நீல நிற மேகங்கள் உருவாகும். இரவு, விடியற்காலைப் பொழுதில் மழைப்பொழிவு அதிகமாகும். மலைப்பகுதிகளில் மழை, காற்று கூடுதலாக இருக்கும். புன்செய் பயிர்கள் தழைக்கும். எள், உளுந்து அதிகம் விளையும். சேனாதிபதியாகவும் சனி பகவான் வருவதால் எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி தரப்படும். ராணுவம் நவீனமயமாகும். தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ராசிகள் இணைப்பை க்ளிக் செய்து அந்தந்த ராசிக்கான புத்தாண்டுப் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்:

மேஷம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்மேஷ ராசி வாசகர்களே !

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக் கொண்டவர்களே! உங்களுடைய லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீடான சுகவீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

சனிபகவான் இந்த ஆண்டு முழுக்க 9-ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். ஆனால் இந்த ஆண்டு முழுக்க கேதுவும் 9-ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் அவ்வப்போது திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் சங்கடத்துக்குள்ளாவீர்கள்.


நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சு வலி, நீரிழிவு, கை கால் வலி வந்து போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். பிரச்சினைகளில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.

இந்த வருடம் தொடக்கம் முதல் 18.05.2019 வரை குரு அதிசார வக்ரமாகி 9-ம் வீட்டில் நிற்பதால் இக்கால கட்டத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வீடு, மனை சேரும். கல்யாணம், மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் எனப் பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள்.

ஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு அமர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதக் கவலை, சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் நேரும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும்.

ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும்.


வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். கமிஷன், ஷேர் மூலம் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்களே! நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துச் செல்லுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு.

பெண்களுக்கு: ராகுபகவான் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து உயரும். நாத்தனார் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார். குழந்தை பாக்கியம் உண்டு. வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. கணவர் மனம் விட்டுப் பேசுவார். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்.

மே முதல் அக்டோபர் மாதம் வரை குரு மறைவதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவது நல்லது. இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு பக்கம் அலைச்சலையும் செலவுகளையும் தந்தாலும் மற்றொருபக்கம் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு பிரதோஷ நாளில் சென்று வணங்குவதுடன். இளநீரைத் தானமாகக் கொடுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்ரிஷப ராசி வாசகர்களே!
ஐந்தில் உழைக்கும் வாழ்க்கை தான் ஐம்பதில் மகிழ்ச்சி தரும் என்பதை முழுமையாக நம்பி அதற்கேற்ப உழைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த விகாரி ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும்.


புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சாதாரண நிலையிலிருந்து சாமான்ய நிலைக்கு முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். இனி குழம்பாமல் பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சின்ன் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைய ஏற்பார்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும்.

இந்த ஆண்டு முழுக்க சனியும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் ஒருவிதப் படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.

சில உண்மைகளைச் சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் எதிலும் நாட்டமின்மை, பிடிப்பற்ற போக்கு காணப்படும். சில நேரம் கறாராகப் பேசி சிலரின் மனதைப் புண்படுத்துவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். கண் பார்வை யைக் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் மற்றும் காது வலி வந்து போகும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வாகனத்துக்கான லைசன்ஸ், இன்சூரன்சைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.


இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகள் துரத்தும் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார் கள். சொந்தபந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீிகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பயம் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.


வியாபாரிகளே! வட்டிக்கு வாங்கிக் கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றி லாபமீட்டுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கூடிவரும். கெமிக்கல், ஹோட்டல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.


உத்தியோகஸ்தர்களே! பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருடத் தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.

பெண்களுக்கு: மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு ராசியைப் பார்க்க இருப்பதால் கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடகிலிருந்த தங்க நகையை மீட்பீர்கள். நாத்தனாருக்கு இருந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். மாமனார், மாமியார் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். ஆனால், அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் வரும்.

இந்த ஆண்டு அனுபவ அறிவாலும், இங்கீதமான பேச்சாலும், மாறுபட்ட அணுகுமுறையாலும் வெற்றி பெற வைக்கும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். நீர்மோரைத் தானமாகக் கொடுங்கள். வசதி, வாய்ப்புகள் அமையும்.

மிதுனம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மிதுன ராசி வாசகர்களே!

வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்களுக்கு 2-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அனுபவப் பூர்வ மாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களையெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். மனோதைரியம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் இருந்த தல்லவா, இனி சமாதானக் கொடி பறக்கும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

இந்த ஆண்டு முழுக்கச் சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். புதிய நண்பர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அதிசார வக்கிரமாகி நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே எனத் தவித்த தம்பதியினருக்கு அழகான வாரிசு உருவாகும். அக்காவுக்குத் திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.


குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை 6-ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனைவியுடன் மனம்விட்டுப் பேசித் தீர்க்கப் பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைச் சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குப் கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.


வியாபாரிகளே! மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்துப் பெரிய முதலீடுகளைப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பழைய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உணவு, மின்சாரப் பொருட்கள், பயணம், காகிதப்பொருட்கள், பதிப்பகத் தொழில், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். சிலருக்குத் திடீர் இடமாற்றமும் உண்டு. சக ஊழியர்களின் தவறுகளை மேலிடத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பர்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பளப் பாக்கியை போராடிப் பெறுவீர்கள்.


பெண்களுக்கு : நவம்பர் மாதம் முதல் குரு சாதகமாக வருவதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஆனால் கண்டகச்சனி தொடர்வதால் தங்க நகை இரவல் வாங்கவோ கொடுக்கவோ வேண்டாம். கணவரை அனுசரித்துப் போங்கள். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.


இந்தப் புத்தாண்டு சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன், திராட்சைப் பழ சாற்றைத் தானமாகக் கொடுங்கள். செல்வாக்கு, கௌரவம் அதிகமாகும்.

கடகம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கடக ராசி வாசகர்களே!

ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு மாறும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இந்த வருடம் முழுக்கச் சனியும், கேதுவும் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.

இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  சிலரைப் பண்படுத்துவதற்கு முயன்று தோல்வியடைவீர்கள்.


குருபகவான் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரம் வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் காண்பீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள்.

ஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில காரியங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

பூர்விகச் சொத்தை சீர் செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரண பிரச்சினையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது.


வியாபாரிகளே! வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த துண்டுப் பிரசுரம், வானொலி விளம்பரத்துக்குச் செலவிடுவீர்கள். பக்கத்துக் கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்கள் அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பார்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள். அரசுக் கெடுபிடிகள் தளரும்.

பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்குத் திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உத்யோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரத்தில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும்.

பெண்களுக்கு: சனிபகவான் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். உங்களுக்கு இருந்து வந்த தைராய்டு தொந்தரவு குறையும். பழைய கடனைப் பைசல் செய்ய உதவிகள் கிட்டும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு 5-ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.


இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சனிக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் நுங்கைத் தானமாகக் கொடுங்கள். இன்பம் பெருகும்.

சிம்மம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


சிம்ம ராசி வாசகர்களே!

ஊராரின் தூற்றல்களுக்குச் செவி சாய்க்காமல் வாழ்வின் உயரத்தை மட்டும் நோக்கிச் செல்லும் குணமுடையவர்களே! இந்த ஆண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.

பூர்விகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால், உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும்.

இந்த ஆண்டு முழுக்கச் சனியும், கேதுவும் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சுற்றியிருப்ப வர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். அவ்வப்போது அடிவயிறு வலிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் கனமான பொருட்களைச் சுமக்க வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க ராகு, லாப வீட்டுக்குள் நிற்பதால் வர்த்தகப் பங்குகளில் லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கோயிில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர் கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.


ஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசிக்குக் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம் வந்து போகும். தாய்வழி உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி நுழைய வேண்டாம். தாய்வழி சொத்துப் பிரச்சினையில் வழக்கு, நீதிமன்றம் போகாமல் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை 5-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகளுக்குத் தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொது விழாக் கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.


வியாபாரிகளே! பற்று  வரவு உயரும். ராகு சாதகமாக இருப்பதால் பிரபலங்களின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், துணிக்கடை, ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.

உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலை களையும் சேர்த்துப் பார்த்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே! இனி அந்த அவலநிலை மாறும். உங்களின் தனித்திறமையைக் கண்டு மேலதிகாரி பாராட்டுவார்.

பெண்களுக்கு: சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மே முதல் அக்டோபர் வரை இந்த குரு சாதகமாக இல்லாததால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிக மாகும்.

உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். மாமியார் சில நேரம் குறை கூறினாலும் மனசுக்குள் உங்களைப் புகழ்வார். நவம்பர் முதல் குரு சாதகமாவதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஆகமொத்தம் இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து உங்களை மேலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன் தர்ப்பூசணிப் பழத்தைத் தானமாகக் கொடுங்கள். நிம்மதி கிட்டும்.கன்னி - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


கன்னி ராசி வாசகர்களே!

மனத்துக்குச் சரியெனத் தோன்றுவதைத் திட்டவட்டமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடைய வர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிக்கள் மத்தியில் பிரபலமாக ப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.

வருங்காலத்துக்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனங்கள், மின்சாரப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன், ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் ரசனை மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தைச் சரிபார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும்.

மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது வீட்டைப் பாதுகாப்பாக பூட்டிச் செல்லுங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். புகைப்பழக்க முள்ளவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது.


இந்த ஆண்டு முழுக்க ராகுவும் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சிறுசிறு அவமானங்கள், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

இந்த வருடம் முழுக்க குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சிலரைக் கடிந்து கொள்வீர்கள். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு, யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.

தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக் கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கி னாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்துச் சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம்தவறிச் சாப்பிடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். நெஞ்செரிச்சல், வாயுக் கோளாறு வந்து போகும்.


வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்துப் பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கமிஷன், ரியல் எஸ்டேட், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். பங்குதாரர்களால் விரயம் வரும்.

உத்தியோகஸ்தர்களே! ராகுவால் உத்தியோ கத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கியமான கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.


பெண்களுக்கு: குரு ஓரளவு சாதகமாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மாமனார், மாமியார், நாத்தனாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். இந்த ஆண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் சமையலறைச் சாதனங்கள் பழுதாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் மீது உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களைத் தலைநிமிர வைப்பதுடன் புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குப் புதன்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் வெள்ளரிப் பிஞ்சைத் தானமாகக் கொடுங்கள். வாழ்வு சிறக்கும்.

துலாம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசி வாசகர்களே!

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயின் அருமை பெருமைகளை அறிந்த நீங்கள், தாய்நாட்டையும் நேசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று விழி பிதுங்கி நின்றீர்களே! இனி அதற்கான வழி வகைகள் கிட்டும்.

பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே! இனி அரவணைத்துப் போவீர்கள். மகனுக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! இப்பொழுது கூடி வரும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மனவலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியங்களை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும் கேதுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள்மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள்.


நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சுமம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

வருடம் முழுக்க ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வருட ஆரம்பம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலைச்சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 2-ம் வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை 3-ம் வீட்டுக்குக் குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும்.

முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி  முடிக்க வேண்டி வரும். தம்பி ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.


வியாபாரிகளே! சரக்குகளை நிரப்பிவைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி, சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். அறைகலன்கள், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசுக் கெடுபிடிகள் தளரும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த புதுச் சலுகைகளை அறிவிப்பீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களே! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களைக் குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்சினைகளைக் கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே! அதெற்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு: கேதுவும், சனியும் சாதகமாக இருப்பதால் கணவர் முழுச் சுதந்திரம் தருவார். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமியார், மாமனார் வகையில் உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். நவம்பர் முதல் குரு சரியில்லாததால் கணவருடன் கொஞ்சம் மோதலும் வரும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்தப் புத்தாண்டு கொஞ்சம் போராட்டத்தைத் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் கரும்புச் சாற்றைத் தானமாகக் கொடுங்கள். வெற்றி நிச்சயம்.

விருச்சிகம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


விருச்சிக ராசி வாசகர்களே!

ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். உங்கள் 9-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சூரியன் 6-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கிப் போயிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்கும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அதிக வட்டிக் கடனை அடைப்பதற்குக் குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுக்க பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென்று நினைப்பீர்கள். முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.

இந்த ஆண்டு முழுக்க கேது 2-ம் வீட்டிலும், ராகு 8-லும் தொடர்வதால் கடுகடுப்பாகப் பேசாதீர்கள். சில நேரம் நீங்கள் விளையாட்டாகப் பேசப் போய் அது விபரீதமாக முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினை வந்து போகும். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம்.


விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் தலைத்தூக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வறட்டு கவுரவத்துக்கும், போலிப் புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

வருடத் தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு அதிசார வக்கிரமாகி இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். கோயில் கோயி லாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர் களுக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையை உணர்வார்கள்.

மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். கடனாகவும், கைமாற்றாக வும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர் மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும், புதிருமாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்காவுக்குக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பிப் பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

வீண் பழியும் வந்து நீங்கும். நீங்கள் நல்லதையே பேசினாலும் மற்றவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தம் கொள்வார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.


வியாபாரிகளே! மாவு விற்கப்போய் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி, தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட் களை நம்பித் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுக்காதீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி இறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.


பெண்களுக்கு: நவம்பர் மாதம் முதல் குரு சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், திருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார். சர்ப்ப கிரகங்களின் போக்கு சரியில்லாததால் கணவ ருடன் கருத்து மோதல்கள் வரக் கூடும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளைப் படைக்கத் தூண்டும் வருடமிது.

பரிகாரம்: அருகிலிருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் எலுமிச்சை சாற்றைத் தானமாகக் கொடுங்கள். எதிலும் வெற்றியுண்டு.

தனுசு - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


தனுசு ராசி வாசகர்களே!

சேமித்து வைப்பதில் தேனீக்களைப் போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியெனப் பட்டதையே செய்வீர்கள். புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள்.

இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புதுமனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாகத் தொடர்வதால் உடல்நலம் பாதிக்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துகொள்வார்கள்.

இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7-ம் வீட்டிலேயே ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனத்தில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்சினை, தலைச்சுற்றல் வந்துசெல்லும். இரும்பு, நார், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் வரக்கூடும்.


மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்து போகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறைக் கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று செய்வது நல்லது.

வருடம் பிறக்கும் போதிலிருந்து 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்து் கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். நல்ல வாய்ப்பையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று சில நேரம் புலம்புவீர்கள். பித்தத்தால் தலைசுற்றும். வாயுக்கோளாறால் வயிறு, நெஞ்சு வலிக்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களைப் புறக்கணிப்பது போலத் தோன்றும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நகையை வங்கிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வறட்டு கௌரவத்திற்காகச் சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காமல் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப் பாருங்கள். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்குக் குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர்ப் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.

என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள் நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்ப்பது நல்லது.

மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி தீர்க்கப் பாருங்கள்.


வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாகப் பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புதிய கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து, எண்டர்பிரைஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! கிடைக்க வேண்டிய பதவியுயர்வு ஏதோ காரணங்களால் தடைபட்டுப்போனதே! இனி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்தப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.


பெண்களுக்கு: மே முதல் அக்டோபர் வரை ஓரளவு குரு சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்க லோன் கிடைக்கும். கணவர் உங்களை மதிப்பார். பிள்ளை பாக்கியம் உண்டாகும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். இந்த ஆண்டு முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததால் உறக்கமின்மை, சைனஸ் தொந்தரவு, நெஞ்சு வலி வந்து நீங்கும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் சின்னச் சின்னத் தொந்தரவுகளைத் தந்தாலும் மையப் பகுதி முதல் எதிர்பாராத பணவரவு, வெற்றிகளைத் தரக் கூடியதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன் கேழ்வரகுக் கூழைத் தானமாகக் கொடுங்கள். வளம் பெருகும்.

மகரம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்மகர ராசி வாசகர்களே!

பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்றுச் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல  மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று, புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த பனிப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்த விகாரி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள்.


சாதுர்யமாக, சமயோஜிதமாக யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐபிக்கள் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனங்கள் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.

இந்த ஆண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும்.

இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்-. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் சில முடிவுகளை எடுக்கப் பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

ராகு இந்த ஆண்டு முழுக்க 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் வி.ஐ.பிக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். புராதனப் புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளிமாநிலத்துப் புண்ணிய ஸ்தங்களுக்கும் சென்று வருவீர்கள். வெளி நாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 12-ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்னச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள்-.

செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்துபோகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துசெல்லும்.


வியாபாரிகளே! எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனிப் புதுப் புதுத் திட்டங்களால் போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டுப் புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாகப் பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களைப் புகார் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.


பெண்களுக்கு: மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு சாதகமாவதால் தடைகள் யாவும் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மனம்விட்டுப் பேசுவார். நாத்தனாரின் நர்த்தனம் குறையும். சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். சனியின் போக்கு சரியில்லாததால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் கவலைகள் வந்து செல்லும். மாமியார் குறைப்பட்டுக் கொள்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பாபா கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் ரோஸ் மில்க்கைத் தானமாகக் கொடுங்கள். நன்மை தொடரும்.

கும்பம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கும்ப ராசி வாசகர்களே!

எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜிதப் புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.


தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவார்கள். மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனிக் கராறாகத் தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.

ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சில நேரம் மன இறுக்கம் வந்து நீங்கும். கனவுத் தொல்லையும் அதிகரிக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும்போது கவனம் தேவை. வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.


இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனத்தை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி லாப வீட்டிலே வலுவாக காணப்படுவதால் திடீர்ப் பணவரவு உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த சிலர் முயல்வார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கடனாகவும், கைமாற்றாகவும் கொடுத்த பணம் கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இரு வரும் கலந்தாலோசித்துச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நட்டப்பட்டீர்களே! இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்துங்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.


உத்தியோகஸ்தர்களே! உங்களைக் கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனித் தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்க மாட்டீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.

பெண்களுக்கு: சனியும், கேதுவும் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. மாமனார், நாத்தனார் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். ஆனால், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு சரியில்லாததால் கணவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டுவார். அவருக்குச் சரிசமமாக நீங்களும் அலுத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகர் கோயிலுக்கு சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குவதுடன், தினம்தோறும் பறவைகள் குடிப்பதற்கு மொட்டை மாடியில் தண்ணீர் வைக்க வேண்டும். தடைகள் விலகும்.


மீனம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


மீன ராசி வாசகர்களே!

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரக்தியி லிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்காகக் காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனிப் பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அவர்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.

வருடம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் 3-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதைத் தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள். மகனின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள்.

உங்கள் ராசிக்கு சனிபகவான் இந்த விகாரி வருடம் முழுக்க 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உங்களைப் புகழ்வதைப் போல் இகழ்ந்தவர்களை எல்லாம் ஓரங்கட்டுவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் 4-ம் வீட்டிலும், கேது ராசிக்கு 10-ம் வீட்டிலும் இருப்பதால் மனத்தில் இனம்புரியாத பயம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாகி உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். பிரபலங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். நெருக்கமானவர்களிடம் கூடக் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிக அறிமுகம் இல்லாதவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனதை வாட்டும். ஊர்ப் பொது விவகாரங்களில் உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்வீர்கள். உத்தியோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே, அலுவலகத்தில் அதிகப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட வேண்டாம்.

19.05.2019 முதல் 27.10.2019 வரை ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்குவீர்கள்.

கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்யகால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை எடுத்து நடத்துவீர்கள். ஊரில் மதிப்பு மரியாதை கூடும்.


பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.


வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்துப் பெரிய முதலீடுகள் போட்டுச் சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்கள் நயமாகப் பேசுகிறார் கள் என்று நம்பிப் பெரிய தொகையைக் கடனாகத் தர வேண்டாம். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிசன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துப்படியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வருட பிற்பகுதியில் பதவியுயரும்.

பெண்களுக்கு: இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயம் உடனே முடியும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் வலிய வந்து சில பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். நவம்பர் மாதம் முதல் குரு சரியில்லாததால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

மகளுடன் கருத்து மோதல் வரும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாளுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய வருடமிது.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் சுக்கு, வெல்லம் கலந்த பானக நீரைத் தானமாகக் கொடுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

More

 

Sidebar One

தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்