ஒரு நாள் தலைமை ஆசிரியர் - அசத்தும் அரசுப்பள்ளி - Asiriyar.Net

Monday, July 8, 2024

ஒரு நாள் தலைமை ஆசிரியர் - அசத்தும் அரசுப்பள்ளி

 'ராட்சசி' படத்தில், பள்ளித் தலைமை ஆசிரியையான ஜோதிகா, ஒவ்வொரு நாளும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியராகப் பணியாற்ற அனுமதிப்பார்.


இப்படியொரு பொறுப்பானது புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவி மெய்வர்சிதாவுக்கு நிஜத்தில் வழங்கப்பட்டது. "தலைமைப் பண்பை வளர்க்க வேண்டும்' என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக, தலைமை ஆசிரியை ஆர். தமிழரசி கூறுகிறார்.


அவரிடம் பேசியபோது:


'இதே பள்ளியில் 1981-83-இல் பிளஸ் 1, பிளஸ் 2 நான் படித்தபோது மாணவத் தலைவி. இப்போது தலைமை ஆசிரியை.


படிப்புடன் சேர்ந்து ஆளுமைத் திறனை வளர்ப்பது மிகவும் முக்கியம். இதனால், , ஒருநாள் தலைமை ஆசிரியை பொறுப்பை மாணவி ஒருவரைத் தேர்வு செய்து கொடுக்கத் திட்ட மிட்டேன்.


பிளஸ் 1 உயிரியல் படிப்பை ஆங்கில வழியில் படித்து வருபவர் மாணவி மெய்வர்சிதா. நல்ல படிப்புடன் சேர்ந்து பேச்சு, நடனம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கிய இவரை ஜூன் 26-இல் பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக அமர வைத்தேன். இருக்கையில் அமர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவேட்டை சரிபார்த்தார்.


வகுப்பறைகளுக்குச் சென்று மாணவிகளுடன் உரையாடினார். " உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம், அதனை சரி செய்வேன்' என்றார் மெய்வர்சிதா. மிகுந்த உற்சாகமாக அன்று அவர் இருந்தார்.


இதுவொரு வகையான ஊக்குவிப்புதான். தொடர்ந்து பல வாய்ப்புகளில் இதுபோல மாணவிகளைத் தேர்வு செய்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு கொடுத்து ஊக்குவிக்கவும் இருக்கிறேன்'' என்கிறார் தமிழரசி.


எதிர்பாராத வாய்ப்பு கிடைத்தது, பெரும் மகிழ்ச்சி'' என்கிறார் மெய்வர்சிதா.


Post Top Ad