தமிழகத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 44 லட்சம் மாணவர்கள் மதியவேளையில் சத்துணவு சாப்பிடுகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் தினமும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறையின் ‘டிஎன்எஸ்இடி’ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை செயலியில் தினமும் பதிவேற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சத்துணவு சாப்பிட விரும்பும் மாணவர்களின் பெற்றோரிடம் படிவம் வழங்கி ஒப்புதல் பெறவும் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளோம்.
இந்த பணிகளை சத்துணவு அமைப்பாளர்களை கொண்டே மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களை கற்பித்தல் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்துவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என உயர் நீதிமன்றம் ஓரிரு நாள்களுக்கு முன்புதான் அறிவுறுத்தியிருந்தது. எனவே, இதுபோன்றகல்வி சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment