சேலம் நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், பட்டதாரி ஆசிரியர்கள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதியானவர் என, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 2018ல் தெரிவித்தது.
இதை பின்பற்றி தமிழக அரசு, பி.எட்., பட்டதாரிகளை இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி என அறிவித்தது. 2019 - 22ம் ஆண்டில், ஆசிரியர் நியமன தகுதித்தேர்வில், 14,928 பேர் தேர்ச்சி பெற்று நியமன தேர்வு தாள் - 1க்கு தயாராகி வருகின்றனர்.
தேசிய ஆசிரியர் கல்விக் குழும அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றம், 2023 ஆகஸ்டில் அளித்த தீர்ப்பால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட தீர்ப்பில், பி.எட்., பட்டதாரிகள், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு தகுதியற்றவர்கள் என கூறப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் பி.எட்., பாடத்திட்டப்படி அதன் பட்டதாரிகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்.
இந்த தீர்ப்பால், 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, நான்கு ஆண்டுகளாகவும், 2022ல் தேர்ச்சி பெற்று, ஈராண்டுகளாகவும் தேர்வுக்கு தயாராகி வந்த ஆசிரியர்களின் பணி கனவு கேள்விக்குறியாகி உள்ளது.
அதேபோல் பி.எஸ்சி., கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகத்தில் ஆசிரியரே ஆக முடியாத சூழல் உருவாகி உள்ளது.
அதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு பதிந்து, பி.எட்., பட்டதாரிகளை நியமனத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும், இன்று நடக்கும் நியமனத் தேர்வில், எங்களை அதிக கல்வி தகுதி என காரணம் காட்டி, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
இந்த நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தனி நியமனத் தேர்வு நடத்த வேண்டும்.
இந்த கோரிக்கையை, முதல்வர் ஸ்டாலினுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment