கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறை: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, July 1, 2024

கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறை: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

 
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை பொருத்தவரை வெவ்வேறு காலங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் வெவ்வேறு காலங்களில் வெளியிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.  


இதனை களையும் பொருட்டு, இனி வரும் கல்வி ஆண்டுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களில் தேர்வுகள், பள்ளியில் பொதுத் தேர்வுகள் நடப்பது போன்று ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


இதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நடத்தி வந்தன. 


இனி பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழக அளவில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு இடங்கள் இருக்கின்றன என்ற விவரங்களையும் வெளியிட்டு, அதற்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.


அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள், வேலை நாட்கள் ஆகியவற்றை ஒரே சீராக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் புதிய வரைவு கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். 


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 


ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் தேர்வுகள், தேர்வு முடிவுகள், வகுப்புகள் வெவ்வேறு காலங்களில் நடப்பதால் உயர்கல்வி சேர்க்கையில் மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான கால அட்டவணையை தயாரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 2024-25ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாண்டு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்கும். 1,3,5 பருவத்துக்கான தேர்வுகள் அக்டோபர் 31ம் தேதி அன்று துவங்கி நவம்பர் 25ம் தேதி நிறைவடையும். 


தேர்வு முடிவுகள் டிசம்பர் 16 அல்லது அதற்கு முன்பு வெளியிடப்படும். அதேபோல் 2,4,6 ஆகிய பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி முடிவடையும். மே 31ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பல்கலைக் கழக தேர்வுத்துறைகளும், கல்லூரி நிர்வாகங்களும் இந்த அட்டவணையை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.Post Top Ad