தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரித்தது குறித்தும் விளக்கம் அளித்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார்.
மேலும், கடந்த மாதம் 16ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா, தற்போது தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக உள்ளது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வர் நேரில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேபோன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் என 2ஆக பிரித்து கடந்த மாதம் 16ம் சட்டப்பேரவை கூட்டத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சட்ட மசோதாவும் தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கும் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பது உள்ளிட்ட பிரச்னை குறித்தும் தமிழக கவர்னரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதேபோன்று, தமிழகத்தில் தற்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உள்கட்சி மோதல் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. உள்கட்சி விவகாரம் குறித்து இருவரும் தனியாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment