NEET 2020 - "அரசுப்பள்ளி மாணவனின் சாதனை" "#சொன்னதும் - சொல்லாததும்" - Asiriyar.Net

Saturday, October 17, 2020

NEET 2020 - "அரசுப்பள்ளி மாணவனின் சாதனை" "#சொன்னதும் - சொல்லாததும்"

 





#சொன்னதும் - சொல்லாததும்:

01) #சொன்னது:

இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஒடிஸாவைச் சேர்ந்த ஷோயிப்.

#சொல்லாதது:

இந்த மாணவர் 12 ஆம் வகுப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு தாயுடன் சென்று அங்கேயே வீடெடுத்து தங்கி  அங்குள்ள ஆலன் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று இந்த சிறப்பினை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.



02) #சொன்னது: 

தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தனியார் பள்ளியில் படித்த Srijan.

#சொல்லாதது: 

இந்த மாணவர் ஓராண்டுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.



03) #சொன்னது: 

அரசுப் பள்ளி மாணவரின் சாதனையைப் பாருங்கள்... 

ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான... 

தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார்  720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று மாபெரும் சாதனை. ஏழைகளுக்கு நீட் தேர்வு தான் வரபிரசாதம்...

#சொல்லாதது:

இந்த மாணவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 493 பெற்றவர்.

சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பில் 600க்கு 548 பெற்றவர்.

ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் 193 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தேர்வாகவில்லை.

அதன் பிறகு பல்வேறு தனிநபர்களின் பொருதாளர உதவியாலும் , ஏனைய ஒத்துழைப்புகளாலும் கடந்த ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மூவருக்குமே வாழ்த்துகள்.

**************



இப்போது வேறு சிலவற்றைக் குறித்து சிந்திப்போம்.

இந்திய அளவிலோ -  மாநில அளவிலோ  முதலிடம் பெற்றவராயினும் சரி...

அரசுப் பள்ளியோ தனியார் பள்ளியோ எதிலே பயின்றவராயினும் சரி...

01) அவர்களால் 12 ஆம் வகுப்பினைப் படித்து முடித்த அந்த ஆண்டிலேயே தேர்ச்சி பெற முடியவில்லை.

02) தனியார் பயிற்சி மையங்களில் ஓராண்டோ ஈராண்டோ இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி படித்த பிறகு தான் தேர்வாக முடிகிறது.

03) ஒரு மாணவர் PreKGயில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் செலவு செய்து தனியார் பள்ளியில் படித்திருந்தாலும் கூட NEETக்காக தனிப்பட்ட முறையில் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று மீண்டும் இலட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடிகிறது. அவ்வாறாயின் முதல் 15 ஆண்டுகள் செய்த செலவு தேவை தானா என்று பெற்றோர்கள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

04) அரசுப் பள்ளியில் படித்து முடித்தவுடன் தேர்வெழுதி 193 மதிப்பெண் மட்டுமே எடுத்து தேர்ச்சி பெறாமல் ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 668 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை "அரசுப்பள்ளி மாணவனின் சாதனை" என்று விளம்பரம் செய்வது முறைமையா? 



05) பல்வேறு தனிநபர்களும், அமைப்புகளும் இலட்சக்கணக்கில் உதவி செய்து அதன் மூலம் பெற்ற ஒரு வெற்றியை "ஏழை மாணவனின் சாதனை" என்று கூறுவது நியாயமா? 

அவன் ஏழைதான்... ஆனால் அவனுக்கு கிடைத்தது சும்மாவா கிடைத்தது? அந்தப் பணக்காரப் பயிற்சி வேறொருவர் பணம் செலுத்தியதால் அல்லவா கிடைத்தது...

06) 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு ஓராண்டோ ஈராண்டோ பயிற்சிக்காக படிப்பதும்... அதற்காக பெருந்தொகையைச் செலவழிப்பதும் எத்தனைப் பேருக்கு இயலுஞ் செயலாகும்?

~ தகடூர் ப.அறிவொளி.

No comments:

Post a Comment

Post Top Ad