குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண் அரசு ஊழியர்களுக்கும், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒற்றை பெற்றோராக இருக்கும் ஆண்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் விவாகரத்து பெற்றவர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நிலையில் உள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.
தங்கள் மேலதிகாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு அவர்கள் இந்த விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுப்பவர்களுக்கு முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் ஊதியமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீதம் ஊதியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுத்திறனாளியை கவனித்துக் கொள்ளும் நபர், எப்போது வேண்டுமானாலும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் முழுத் திறனுடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment