தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசு அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஊதிய மாற்றங்களின்போது அளிக்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி களப்பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், பல்வேறு அரசு துறைகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் என்று நிரந்தர ஊதியம் இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் மற்றும் பணி நிரந்தரம் செய்யப் படவேண்டும். தமிழ்நாட்டில் 3 லட்சம் மத்திய, மாநில பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. நிர்வாக சிக்கல்கள் எழுகின்றன. இந்த சிக்கல்களால் அனைத்து அரசுத்துறை பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வருகிற 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தை நடத்தவிருக்கிறது. இந்தநிலையில் எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு நினைவூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் வருகிற 14ம் தேதி விழுப்புரம் நகராட்சி திடலில், மாநில அளவில் அரசு பணியாளர் சங்கத்தினுடைய மாநில நிர்வாகிகள், மாநில மாவட்ட நிர்வாகிகள், இணைப்பு சகோதர சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னணி பணியாளர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.