அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள் என்றும் அவர்கள் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்பதையும் நிரூபிக்கும் வகையில், மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கமத்தை முதல் முறையாக புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி நடத்துகிறது.
புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி பிப்.26-ம் தேதி சங்கமம் நிகழ்வை நடத்த உள்ளது.
இது தொடர்பாக குழந்தைகளின் குரலில் வாட்ஸ் அப் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இந்நிகழ்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என பல பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, "அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள். யாரும், யாருக்கும் குறைந்தவர்களில்லை. பெற்றோர்களுக்கு இதைத் தெரிவிக்கவும், வெளி உலகத்துக்கு அரசுப் பள்ளிகளின் திறனைக் காட்டவும் முடிவு செய்தே இந்நிகழ்வை ஏற்பாடு செய்தோம். கடந்த ஆண்டு வாசிப்புத் திருவிழாவை நடத்தினோம். அந்நிகழ்வு தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்படுகிறது. அடுத்தபடியாக தற்போது பெற்றோர், ஆசிரியர் திருவிழா சங்கமம் 2020-ஐ நடத்துகிறோம்.
இதில் தலைகீழாக வாசித்தல், வார்த்தை விளையாட்டு, மருவிய பழமொழிகள், மரபுச் சொற்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பொம்மலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நடத்துகின்றனர். அத்துடன் பெற்றோர் பங்கேற்பும் அவசியம் என்பதால் அவர்கள் உணவுத் திருவிழாவையும் நடத்துகின்றனர். முதல் முறையாக இந்நிகழ்வை நடத்தி, அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் திறனை வெளி உலகுக்குக் காட்டுகிறோம்" என்று குறிப்பிட்டார்.