புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு தொடக்கப்பள்ளியில் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில், தற்போது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தொடங்கப்பட்டு ஆங்கில வகுப்பு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த சில வருடங்களாகவே மிகக்குறைவாக இருந்த மாணவர் சேர்க்கை தற்போது சற்றே அதிகரித்து வருகிறது.
பெற்றோர்கள் பலரும் தாமாக முன்வந்து தனியார் பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, தாந்தாணியைச் சேர்ந்த சிவக்குமார்-சுகன்யா என்ற பெற்றோர், தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தங்கள் மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கி வந்து அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.
அதோடு, தனியார் பள்ளிக்கு வருடம்தோறும் கட்ட வேண்டிய பணத்தை அரசுப் பள்ளிக்கு வழங்க முடிவு செய்த அந்தப் பெற்றோர் அரசுப் பள்ளியின் பள்ளி கட்டடத்துக்கு தங்கள் சொந்த செலவில் பாரம்பர்ய கலைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஓவியங்கள் வரைந்துகொடுத்து அசத்தி இருக்கின்றனர். தற்போது அரசு தொடக்கப்பள்ளி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதுபற்றி அந்தப் பெற்றோரிடம் பேசினோம், "வீட்டுல உள்ள பெரியவங்க எங்க மகளைப் பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்கச் சொன்னாங்க. அவங்க பேச்சக்கேட்டுத்தான் மகளை நாங்க சேர்த்தோம். வருஷங்கள்தான் போச்சு. ஆனா, அவங்க சொன்ன மாதிரி பெருசா எதையும் அவள் கத்துக்கலை.
அரசு தொடக்கப்பள்ளியிலேயே நல்லா சொல்லிக் கொடுக்கிறாங்க, அங்கேயே சேர்த்திடலாம்னு முடிவு பண்ணிணோம். வீட்டுல யாருக்கிட்டேயும் கலந்து பேசிக்கல. தனியார் பள்ளியிலிருந்து டிசி வாங்கிக்கிட்டு வந்து தொடக்கப் பள்ளியிலேயே மகளைச் சேர்ந்துவிட்டோம். தனியார் பள்ளியிலிருந்ததைவிட, தற்போது தொடக்கப்பள்ளியில் படிக்கும் மகளிடம் இருந்து ரொம்பவே முன்னேற்றம் தெரிஞ்சது. அப்பத்தான், தனியார் பள்ளிக்குக் கொடுக்கும் பணத்தை அரசுப் பள்ளிக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிணோம். பள்ளிக் கட்டடத்துக்கு பெயின்ட் அடிச்சி கொடுத்திருக்கோம். தொடர்ந்து நிறைய செய்யணும்" என்கிறார்.
ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்ற பெற்றோர்
இதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ``இவர்களைப் போன்று இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் பள்ளி கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்துக்கொடுத்துள்ளனர். தன்னார்வ அமைப்பு ஒன்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துக் கொடுத்துள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து ஆண்டு விழா நடத்திக் கொடுத்துள்ளனர். இப்படி, தொடர்ந்து பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதோடு நிச்சயம் முன்மாதிரித் தொடக்கப்பள்ளியாக மாறும்" என்றனர்.