6000 பேர் மீது எஃப்ஐஆர்; 7000 பேருக்கு 17பி -அரசுக்கு எதிராக புதிய குழுவைத் தொடங்கிய அரசு ஊழியர்கள் - Asiriyar.Net

Tuesday, February 11, 2020

6000 பேர் மீது எஃப்ஐஆர்; 7000 பேருக்கு 17பி -அரசுக்கு எதிராக புதிய குழுவைத் தொடங்கிய அரசு ஊழியர்கள்





ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தின்போது 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் 7,000 பேருக்கு 17 பி-என்ற விளக்க நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது 17 பி (அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்கான விளக்க நோட்டீஸ்) மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோவினர் சில காரணங்களுக்காகப் போராட்டத்தைக் கைவிட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெற வலியுறுத்தி ஒவ்வொருவரும் சார்ந்துள்ள சங்கங்களும் அமைதியாகிவிட்டன. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் மீதான அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகள் விலகத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை கடந்த 10.11.2019-ல் திருச்சியில் ஏற்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக சென்னை சேப்பாக்கத்தில் இன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராஜசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் என்.இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ஜனார்த்தனன் கூறுகையில், ``ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தில் 7,000 அரசு ஊழியர்களுக்கு 17 பி என்ற விளக்க நோட்டீஸும் 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டன. மேலும், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. மாறாக பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த உண்ணாவிரதத்தில் ஊதிய முரண்பாடுகளையும் சித்திக் ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழு பரிந்துரை அடிப்படையில் அரசாணையையும் வெளியிட வேண்டும். கோவை வளர்ச்சி துறை அலுவலர்களின் மாறுதலை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாகத் துறை சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த ஆலோசிக்கப்படும்" என்றார்.

ஜனார்த்தனனிடம், `ஏற்கெனவே ஜாக்டோ-ஜியோ என்ற அமைப்பை ஏற்படுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டீர்கள், பின்னர் ஏன் இந்தப் புதிய குழு?' என்றோம்.

`` 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட காலவரையற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தையடுத்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அறிவிப்புகளை அறிவித்தார். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தின்போது நடந்த சில பின்னடைவுகளால் ஜாக்டோ- ஜியோ அமைப்பால் முழுவீச்சில் செயல்பட முடியவில்லை. மேலும், குறிப்பிட்ட சில சங்கங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன. அதனால்தான் இந்தப் புதிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 40-க்கும் மேற்பட்ட துறைகளின் தொழிற்சங்கங்கள் உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

Post Top Ad