நமது உடலில் சுரக்கும் 'மெலனின்' என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்' என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான்.
சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும்.
வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.
சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். "தலைமுடி சாயம்" உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை சந்திக்கவேண்டியது அவசியம்.