அவர்கள் தோன்றுவதற்கு காரணம் அவர்களது பெற்றோர்கள். இதை தான் பரம்பரை என்பார்கள். என்ன தான் அன்புடன் நம்மை அவர்கள் வளர்த்து ஆளாக்கினாலும் அவர்களும் மண்ணுலகை விட்டு மறைகின்றனர். அப்படி மறைந்த நம் பரம்பரையின் முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களை வழிபடுவதற்குரிய ஒரு நாள் தான் ஆடி அமாவாசை தினமாகும். அதை பற்றிய சில விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு முன்பாகவே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும். ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், காசி போன்ற ஊர்களில் இருக்க நேர்பவர்கள் அந்த ஊர்களில் இருக்கும் கடல் மற்றும் ஆறுகளில் 3 முறை தலைமுழுகி எழுந்து, அந்த நீர்நிலையில் நின்ற வாறே தென்திசையை நோக்கி நின்று, மறைந்துவிட்ட அனைத்து முன்னோர்களையும் கண்களை மூடி வணங்க வேண்டும்.
ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், காசி போன்ற ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் நதிகள், கோவில் குளங்களிலும் தலைமுழுகி தர்ப்பணம் கொடுக்கலாம். பின்பு அந்த புண்ணிய இடங்களின் கரைகளில் வேதியர்களை கொண்டு தர்ப்பணம் தர வேண்டும். ஆண் வாரிசுகளே பெரும்பாலும் தர்பண சடங்கை செய்வார்கள். அப்படி ஒரு பரம்பரையில் ஆண் வாரிசே எவரும் இல்லாத பட்சத்தில் பெண்களும் தர்பண சடங்கை செய்யலாம். இந்த தர்ப்பணத்தை காலை 5.45 லிருந்து 6.30 மணிக்குள்ளாக தந்து விட வேண்டும்.
தர்பை புல் ஆசனத்தில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது. அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு வெள்ளை நிற துணியை தரையில் விரித்து அதில் அமர்ந்து கொள்ள வேண்டும். தர்பணத்திற்கு பயன்படுத்தும் பாத்திரங்களில் செம்பு பித்தளையால் செய்யப்பட்டவை மட்டும் இருக்க வேண்டும். கண்ணாடி, ஸ்டீல் பாத்திரங்களை தவிர்க்க வேண்டும்.
தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்பு இந்த தர்ப்பணம் சடங்கு நன்றாக அமைய தேவர்களின் நாயகனாகிய மஞ்சளில் விநாயகரை பிடித்து வழிபட வேண்டும். அல்லது மானசீகமாக வழிபடலாம். பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது.
உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்த பின்பு உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் பிள்ளைகள் இல்லாமல் இறந்தவர்கள், திருமணமாகாமல் இறந்தவர்கள், உங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாமல் இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் தரலாம். இதற்கு “காருண்ய தர்ப்பணம்” என்று பெயர். இத்தகைய தர்ப்பணம் அளிப்பவர்களுக்கு மிகுந்த புண்ணியம் சேரும். தேவர்கள் மற்றும் ரிஷிகளின் நல்லாசிகள் காருண்ய தர்ப்பணத்தை அளிப்பவர்களுக்கு எப்போதும் உண்டு.
இதன் பின்பு வேதம் ஓதிய அந்த வேதியர்களுக்கு அரிசி, வஸ்திரம், தட்சிணை போன்றவற்றை வழங்கி அவர்களின் ஆசியை பெற வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சிலரால் தர்ப்பணம் கொடுக்க இயலாம் இருக்கும். அது போன்ற சமயங்களில் வீட்டில் படையலிட்டு முன்னோர்களை வழிபடலாம்.
வருடத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய மூன்றும் முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய சிறந்த தினங்களாகும். இதில் ஆடி அமாவாசை தினத்தன்று நாம் நமது பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால், நம்முடைய முன்னோர்களின் மனம் குளிர்ந்து அவர்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடுமையான தோஷங்கள் மற்றும் முன்னோர்களின் சாபங்களை இந்த ஆடி அமாவாசை முன்னோர்களின் வழிபாடு போக்கும். அதோடு வாழ்வில் இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகி அளவற்ற புண்ணியம் கிடைக்கும்.