ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது என ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.
துாக்கம் என்பது உடலுக்கு அத்தியாவசியமானது. உலகளவில் தற்போது இரவில் சரியாக துாக்கம் வராமல் துன்பப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர் வரை துாக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.பகலில் உழைத்த பிறகு இரவில் உடலும் மனமும் ஓய்வெடுத்து கொள்ளும் நிலை தான் துாக்கம். அன்றாட பணிகள் சீராக இருப்பதற்கும், உடல் ஆரோக்கியம் காக்கவும் போதிய துாக்கம் அவசியம். துாங்கும் நேரத்தில் சிலநாள் ஏற்ற இறக்கம் இருந்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். தொடர்ந்து இருப்பின் உடல்நிலை பாதிக்கப்படும். இந்நிலையில் ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு மாநாட்டில் ஆய்வு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 சதவீதம்இது குறித்து கார்டியாலஜி நிபுணர் டாக்டர். எபமெயினோண்டஸ் கூறுகையில் ''ஆறு மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது எட்டு மணி நேரத்துக்கு அதிகமாகவோ துாங்குவது இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.இதற்கான காரணத்தை துல்லியமாக அறிவதற்கு, மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
ஆனால் துாக்கம் குறைவு மற்றும் அதிகரிப்பால் உடலில் குளுக்கோஸ், வளர்சிதை மாற்றம், ரத்த அழுத்தம், வீக்கங்கள் ஆகியவை காரணமாக இருதயநோய் ஏற்படுகிறது.ஒரு லட்சம் இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அடுத்த ஒன்பது ஆண்டுகளில், இருதய பிரச்னை ஏற்படுவதில் ஆறு - எட்டு மணி நேரம் துாங்குபவர்களுக்கு 11 சதவீதமாகவும், ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக துாங்குபவர்களுக்கு 33 சதவீதமாகவும் இருக்கிறது. எனவே குறைவான நேரம் துாங்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிக நேரம் துாங்குவதை தவிர்க்க வேண்டும்'' என்றார்.
கார்டியாலஜி டாக்டர் இமிலி மெக்ரத் கூறுகையில், ''இந்த ஆய்வின் மூலம் குறைந்த மற்றும் நீண்ட நேரம் துாங்குவதின் சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆய்வு அரிதாக துாக்க பிரச்னை உள்ளவர்களுக்கான எச்சரிக்கை மணி அல்ல. ஆனால் தினமும் துாக்கம் வராமல் தவிப்பவர்கள், மருத்துவர்களை அணுக வேண்டும் என்பதை பரிந்துரைக்கிறது'' என்றார்.