மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்ததேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என்று எந்த அரசுத்துறையிலும் பணியில் சேரும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்கள் கல்விச்சான்றிதழில் கூறப்பட்ட பிறந்த தேதியும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் ஒன்றாக இருக்க வேண்டும்.
குறிப்பாக 10ம் வகுப்பு சான்றிதழில் கூறப்பட்ட பிறந்த தேதியே இறுதியான ஆதாரமாக கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக சம்பந்தப்பட்டவர்களின் 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும். இந்த சான்றிதழில் 10ம் வகுப்பு முடிக்க, 1977ம் ஆண்டு வரை, 15 வயதும், 1978 முதல் 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இறுதி விசாரணைக்கு பின் வயதில் தவறு இருந்தால், பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவருக்கான அனைத்து அரசு பலன்களும், ஓய்வூதிய பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.