ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து வந்த மத்திய அரசு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்போது ஆண்டுக்கு ஒருமுறை தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறி உள்ளது.
2019-ம் ஆண்டு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் ஆண்டுக்கு ஒருமுறை தான் நடைபெறும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகான மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக நீட் நுழைவு தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ்ஜவடேகர், மற்றும் இணை மந்திரிகளி, அடுத்த ஆண்டு முதல் "மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி வந்தனர்.
அதன்படி, 2019-ம் ஆண்டு பிப்ரவரி, மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். இது ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அளித்துள்ள பதிலில், 2019-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019-ம் ஆண்டு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. ஆப்லைன் முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு நீட் தேர்வு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பது தெளிவாகி உள்ளது