புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 9, 2021

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 


புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் க. கணபதி அரசு பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,  மாநகராட்சி பள்ளிகள் என 40}க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார். 


இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  பாலியல் அத்து மீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க முன்வரவேண்டும். பள்ளிகளில் பார்வைக் குறைபாடு, உடல் ரீதியான பிரச்னைகளுக்கு தான் தற்போது மருத்துவர்கள் உள்ளனர்.  மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க நிபுணர்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். 


குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் தவறு செய்யாத ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மாணவர்கள்} ஆசிரியர்கள் மோதலை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.  மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும்  ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.


கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் மற்றும்  சூழல் குறித்து முடிவு செய்து பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.


பேருந்தில் தொங்கக் கூடாது... புதிய கல்விக் கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.  பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதைத் தவிர்க்க ஆசிரியர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Post Top Ad