கரோனா நிவாரணத்துக்கு ரூ.150 கோடி: ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, March 28, 2020

கரோனா நிவாரணத்துக்கு ரூ.150 கோடி: ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு!
கரோனா நிவாரணத்துக்காக தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.150 கோடியை வழங்குவதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது

இது தொடர்பாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவெடுத்துள்ளோம். இதன் தொகை தோராயமாக சுமார் ரூ.150 கோடி இருக்கும்.
தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கிருமி தாக்கத்தின் பிடியில் ஆட்பட்டு 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையினை உணர்ந்துள்ள இந்திய அரசு ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊடரங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், இந்திய அரசிற்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கும் இந்த நோயினை எதிர்கொள்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு போதிய நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய ஒரு அசாதாரணமாக சூழ்நிலையில், தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ ஒருநாள் ஊதியத்தினை கரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் தங்களின் உயிரையும் துச்சமென மதித்து, நோய் பாதிக்கப்பட்டோரை அந்த பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவத் துறை தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ள அனைத்து சுகாதார- தூய்மை ஊழியர்களுக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் ஜாக்டோ-ஜியோ தனது மனமார்ந்த
பாராட்டுதல்களையும் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

இப்பணியாளர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு சானிடைசர், முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு அம்சங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ கேட்டுக் கொள்கிறது.


மேலும், 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இறுதி நாளான மார்ச் 31 நெருங்கும் நிலையில், நிலுவையில் இருப்பதை நேர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு துறைகளில் பணியாளர்களைக் கட்டாயப்படுத்திப் பணியாற்ற வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதை முற்றிலுமாக கைவிடத் தேவையான அறிவுரைகளை அனைத்துத் துறைகளுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ கேட்டுக் கொள்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad