குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக பணியில் சேர்ந்த 2 அரசு ஊழியர்கள் அதிரடி கைது: சிபிசிஐடி நடவடிக்கை - Asiriyar.Net

Post Top Ad

Sunday, February 9, 2020

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக பணியில் சேர்ந்த 2 அரசு ஊழியர்கள் அதிரடி கைது: சிபிசிஐடி நடவடிக்கை
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில், முறைகேடாக தேர்வு எழுதி பணியில் சேர்ந்த 2 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை கைது செய்தனர். டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றது விசாரணையில் உறுதியானது. இந்த இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சித்தாண்டி உட்பட 32 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம் காந்தனை 4 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஓம் காந்தன் சிபிசிஐடி போலீசாரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.

சித்தாண்டி மற்றும் ஓம் காந்தன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக முக்கிய குற்றவாளியான ஜெயகுமாருடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி ஆவண பராமரிப்பு கிளர்க் ஓம் காந்தன் உடன் இணைந்து சித்தாண்டி அரசு அதிகாரிகளின் துணையுடன் ஜெயகுமார் மூலம் மெகா மோசடி செய்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நடந்த 813 விஏஓ பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை தமிழகம் முழுவதும் மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரத்து 860 பேர் எழுதினர். அப்போது, சித்தாண்டி, ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி ஒரு விஏஓ பதவிக்கு ரூ12 லட்சம் வீதம் 10 பேரிடம் ரூ1.20 கோடி பணம் வசூலித்து மோசடியாக விஏஓ தேர்வில் வெற்றி பெற வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி சரண் அடைந்தார். இந்தநிலையில் குரூப் 2 ஏ தேர்வை ராமேஸ்வரம் மையத்தில் எழுதி வெற்றி பெற்ற 42 பேரையும் போலீசார் தொடர்ந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர், தற்போது உத்திரமேரூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் வசந்தகுமார் என்பவர் மூலம் முக்கிய புரோக்கர் ஜெயக்குமாருக்கு ரூ12 லட்சம் கொடுத்து 265.5 மதிப்பெண் பெற்று 41 வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் தற்போது, பட்டுக்கோட்டையில் வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த விமல்குமார்(34) என்பவர், ராதா என்பவர் மூலம் ஜெயக்குமாரிடம் ரூ7 லட்சம் கொடுத்து 276 மதிப்பெண் பெற்று 22வது இடத்தில் சேர்ச்சி பெற்றார். அவர் தற்போது திருச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், குரூப் 4 தேர்வு எழுதி முறைகேடாக பணியில் சேர்ந்ததாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குரூப்2 ஏ, குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று முறைகேடாக பணியில் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* சித்தாண்டி மற்றும் ஓம் காந்தன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக முக்கிய குற்றவாளியான ஜெயகுமாருடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
* ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற 42 பேரையும் போலீசார் தொடர்ந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommend For You

Post Top Ad