டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிபி.சி.ஐ.டி. விசாரித்து வந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் குரூப் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தன. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட போது, ராமேஸ்வரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்றன. குறிப்பாக இந்த வழக்கை அப்போதைய தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது முறையாக நடைபெறாது. எனவே இந்த வழக்கை முழுமையாக சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு முழுமையாக நிறைவு பெற்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபி.சி.ஐ.டி. உடனடியாக வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வழக்கை நேர்மையாகவும், விரைவாகவும் விசாரித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment