அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையை, மாணவர் அடித்த விவகாரத்தில், மாணவன், ஆசிரியை இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில வகுப்பு முதுநிலை ஆசிரியையை, பிளஸ் 1 மாணவர் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமுருகன் விசாரணை நடத்தினார். இதில் வகுப்பறையில் மாணவன் அவரது இருக்கையில் இருந்து மாறி அமர்ந்ததால், மாணவரை ஆசிரியை அடித்ததும், பதிலுக்கு மாணவர் ஆசிரியையை அடித்ததும் தெரிந்தது.
கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி, மாணவரை அடித்த ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியையை தாக்கிய மாணவரை, 15 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து, மனநல உளவியல் ஆலோசகரின் கவுன்சிலிங்குக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வுபெற்ற கல்வி நல அலுவலர்களை கொண்டு அப்பள்ளியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஒரு வார கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment