பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் பதவியில், 11 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் இடமாறுதல் செய்யப்பட்டது, பள்ளிக் கல்வி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக் கல்வி கமிஷனர் பதவி, 2019 நவம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த பதவியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். இவர், 11 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், திடீரென மாற்றப்பட்டார்.
மாற்றம் ஏன்?
பள்ளிக் கல்வித் துறை நிர்வாகப் பணிகளை இயக்குனர்கள் மேற்கொள்வர். அதேநேரம், அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மாவட்ட வாரியாக நேரில் பார்வை யிட்டு, அரசுக்கு ஆலோசனை தரவும், கமிஷனருக்கு பணிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த பணிகளுக்கு பதில், ஏற்கனவே இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்கொண்ட நிர்வாக பணிகளில், கமிஷனர் அலுவலகம் தலையிட்டதால், பல்வேறு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சில நடவடிக்கைகளில், முதன்மை செயலர் மற்றும் அமைச்சரின் முடிவுகளுக்கு மாறாக, கமிஷனர் அலுவலகம் வேறு உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என, பல லட்சம் ரூபாய் செலவு செய்தது; ஊடரங்கிலும், 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யாமல், இரண்டு முறை தேதிகளை மாற்றி அறிவித்தது போன்றவை, அரசின் மீதான நம்பக்கத் தன்மையை கேள்விக்குறியாக்கியது.
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, அக்., 1 முதல் பள்ளிக்கு வரவழைக்கலாம் என, கமிஷனர் அலுவலகம் கருத்துரு அனுப்பியுள்ளது. இதில், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளின் கருத்துகளைப் பெறாமலும், கள நிலவரம் அறியாமலும் முடிவு செய்ததால் பிரச்னையானது.ஆசிரியர் தின விருது வழங்கும் விழா நிகழ்வுகளில், செயலர் மற்றும் அமைச்சரின் முடிவுக்கு மாறாக, வேறு தேதியை நிர்ணயம் செய்ததால் குழப்பம் ஏற்பட்டது.
நிபுணர் குழு சர்ச்சை
புதிய கல்வி கொள்கையை ஆய்வு செய்வதற்கான குழுவில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட இலக்கிய எழுத்தாளர் ஒருவருக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது.
ஆனால், பாட திட்ட தயாரிப்பில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை.'நிடி ஆயோக்' அமைப்பின் இயக்குனராக, சிஜி தாமஸ் பணியாற்றிய போது, பல தன்னார்வ நிறுவனங்கள், நிடி ஆயோக் பணிகளை கவனித்துள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள், பள்ளிக் கல்வி திட்டங்களில் ஈடுபட முயற்சித்துள்ளன. நிதி பற்றாக்குறையால் அவற்றுக்கு அமைச்சகம் அனுமதிக்கவில்லை.இப்படி பல்வேறு விவகாரங்களின் பின்னணியில், இடமாறுதல் வழங்கப்பட்டிருக்கலாம் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment