தருமபுரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்ட பலர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனருமான சபரிமாலா ஒருங்கிணைப்பில், டெட் தேர்வில் வெற்றி பெற்றுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்துக்காக இன்று திரண்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ''டெட் எனும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. 7 ஆண்டுகள் முடிவடைந்தவர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று அரசு கூறுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்று அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உடனடியாக ஆசிரியர் வேலையை வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்த முயன்றனர்.
ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார் சபரிமாலா உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment