ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 18 மூலிகை கலந்த தேனீர் - கல்வித்துறை - Asiriyar.Net

Monday, October 12, 2020

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 18 மூலிகை கலந்த தேனீர் - கல்வித்துறை

 






கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 18 வகை மூலிகை அடங்கிய சிறப்பு தேனீர் வழங்க, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 



சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளது. மாநிலம் முழுதும் இருந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், இங்கு வருகின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆட்கள் வருவதால், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிர்வாக பணிகளை, அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே முடித்து கொள்ளவும், அதற்கு மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கும் படியும், இயக்குனர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 





தவிர்க்க முடியாத நிலையில், சென்னை அலுவலகத்துக்கு வருவோருக்கு, முதலில், 'தெர்மல் ஸ்கேனர்' வழியாக, வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. சராசரி உடல் வெப்பநிலை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.சமூக இடைவெளி அடிப்படையில், வரவேற்பறையில் அமர வைக்கப்பட்டு, குறுகிய நேரத்திற்குள் பணிகளை முடித்து, அனுப்புகின்றனர். வரவேற்பறையில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து, நாற்காலிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அலுவலக ஊழியர்கள், கூட்டமாக கூடி பேசவும், அரட்டை அடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. 



அலுவலகத்துக்கு வரும் ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, 18 வகை மூலிகை கலந்த தேனீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, இந்த தேனீருக்கு, ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேனீரை அருந்தும் அலுவலர்களும், ஆசிரியர்களும், தங்கள் ஊர் அலுவலகங்களிலும், இந்த மூலிகை தேனீர் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad