பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,
1. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம்
2.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள தென்காசி வருவாய் மாவட்டம்
3. வேலுார் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டம் மற்றும்
4. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்
ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து , அதன் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்குமாறும் , மேற்படி புதியதாக தோற்றுவிக்கப்படும் 5 புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு 92 புதிய பணியிடங்கள் மற்றும் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்து , அதனை ஏற்று , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்தார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து அம்முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு கீழ்க்கண்டவாறு தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ . 123 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.