மத்திய பட்ஜெட்டில் முறைப்படி வருமான வரி செலுத்துபவா்களுக்கு பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதாக அனைத்து வகை ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தனிநபா் வருமானவரி வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், முறைப்படி வரி செலுத்துபவா்களுக்கு பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற வரிச்சலுகை ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில் நிதியமைச்சகத்துக்கு சமா்ப்பித்த கோரிக்கை மனுவில் தனிநபா் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும். வருமான வரி செலுத்தும் அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பொதுவான கழிவாக குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் என திருத்தியமைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தோம். இந்த கோரிக்கைகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
மாத ஊதியம் பெறும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன்காக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 5 சதவீத வரியும், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமும், ரூ.12.5 லட்சத்துக்கு மேல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு அதிகாமான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும். வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம், மீளபெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி என்பதால் இதை வருமானமாகக் கருதாமல் செலவினமாகக் கருத வேண்டும். 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்புக்கான கழிவுத் தொகையை ரூ.3 லட்சமாக உயா்த்த வேண்டும்.