வருமான வரி சலுகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஆடிட்டர் ஜி.சேகர் விளக்கம் - Asiriyar.Net

Sunday, February 2, 2020

வருமான வரி சலுகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஆடிட்டர் ஜி.சேகர் விளக்கம்





''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வருமான வரி செலுத்துவோருக்கு, 26 ஆயிரம் ரூபாய் முதல், 78 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கும்,'' என, ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

 ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை வருமானம்ஈட்டுவோர், வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் ரூபாய் முதல், 7.50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோர், தற்போது, 20 சதவீதம் அதாவது, 65 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். இந்த பிரிவினருக்கான வரி, பட்ஜெட்டில், 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 39 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்; 26 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் ஏழரை லட்சம் ரூபாய் முதல்,10 லட்சம் ரூபாய் ஈட்டும் வருவாய் பிரிவினர், தற்போது, 20 சதவீதம், அதாவது, 1.17 லட்சம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். இந்த பிரிவின் வரி, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 78 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு, 39 ஆயிரம் ரூபாய் வரி செலவு மிச்சமாகும்


 பத்து லட்சம் ரூபாய் முதல், 12.50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவினர், தற்போது, 30 சதவீதம் வரி செலுத்துகின்றனர். இந்த வரி, 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த பிரிவினர், 1.95 லட்சம் ரூபாய் வரி செலுத்துவதற்கு பதில், 1.30 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அந்த பிரிவினருக்கு, 65 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்

 அடுத்ததாக, 12.50 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவுக்கான வரி, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், 2.73 லட்சம் ரூபாய் வரி செலுத்தியதற்கு பதில், 1.95 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி வரும். அந்த பிரிவுக்கு, 78 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்கும்

 இருபது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோர், 4.29 லட்சம் ரூபாய் வரி செலுத்துகின்றனர். பட்ஜெட்டில், அந்தபிரிவினர் செலுத்தும் வரி, 3.51 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 78 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்.ஆனால், இந்த வரி சலுகை பெறுபவர்கள், வருமான வரி சட்டத்தில் கொடுக்கப்பட்ட, வீட்டு கடனுக்கு உரிய தள்ளுபடி, வீட்டு வாடகைக்கு உரிய தள்ளுபடி, மருத்துவ காப்பீட்டுக்கு உரிய தள்ளுபடி, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி கட்டண தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை பெற இயலாது. இந்த வரிச் சலுகைகையை, மருத்துவ காப்பீட்டுக்குஉரிய தள்ளுபடியுடன் அளித்தால், நடுத்தர மக்களுக்கு, அதிக உதவியாக இருக்கும்.இதைக் கருதி, அரசு, பட்ஜெட்டில் தக்க மாறுதல் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, ஒருவர், மாதம், 62 ஆயிரத்து, 500 ரூபாய் சம்பளம் வாங்குவதாக வைத்து கொள்வோம். அவர், 65 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். இந்த வரி, பட்ஜெட்டில், 39 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.நிறுவனங்கள், பங்கு தாரர்களுக்கு, 'டிவிடெண்ட்' எனப்படும் பங்கு ஈவு தொகை வழங்குகின்றன. இந்த தொகைக்கு, வரி விதிக்கப்படுகிறது.பட்ஜெட்டில், டிவிடெண்ட் வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால், நிறுவனங்கள், டிவிடெண்ட் வரிக்கு செலவழித்த தொகையை, பங்குதாரர்களுக்கு கூடுதலாக வழங்கும்ஆனால், பங்குதாரர்கள் பெறும் டிவிடெண்ட், எந்த வரி சதவீதத்தில் வரி செலுத்துகின்றனரோ, அந்த வரி சதவீதத்தில் செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டால், இளம் தொழில்முனைவோர், சிறு முதலீட்டாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு, அதிக நன்மைகள் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad