ஊத்தங்கரையில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ்&2 படித்து வந்த விழுப்புரம் மாணவி, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வித்யா மந்திர் என்ற பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தடகம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் & எழிலரசி தம்பதியின் மகள் பிரியங்கா (17) என்பவர், பிளஸ் 2 படித்து வந்தார். தங்கராஜ் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
எப்போதும் கலகலப்பாக பேசிப்பழகி வரும் பிரியங்கா, பிப்.16ம் தேதியன்று, தோழிகளிடம் சகஜமாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், பிப். 17ம் தேதி, விடுதியின் மேல் மாடியில் அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தைப் பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்ததோடு, கதறி அழுதனர்.
இதுகுறித்து பிரியங்காவின் பெற்றோருக்கு விடுதி காப்பாளர் தகவல் அளித்தார். ஊத்தங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் தோல்வியா அல்லது பெற்றோர் ஏதாவது திட்டினார்களா? பாடங்களை படிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்ளில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவி தற்கொலைக்கு முன் ஏதாவது கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து அவர் தங்கியிருந்த அறையிலும் காவல்துறையினர் சோதனை நடத்த உள்ளனர். இச்சம்பவம் பள்ளிக்கூட சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.