புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பச்சலூரில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சர்வதேச தரத்துக்கு நிகராக அரசு நடுநிலைப் பள்ளி உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சேர்த்து மொத்தம் 5 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற வி.ஜோதிமணி, பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் மக்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பள்ளியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டார்.
முதல் கட்டமாக, பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. மேலும், ஏற்கெனவே இடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட ஒரு கட்டிடமும் புனரமைக்கப்பட்டது.
ரூ.20 லட்சத்தில் வசதிகள்
ஒரு வகுப்பறையைத் தவிர அனைத்து வகுப்பறைகளிலும் ஏசி, இணையதள வசதியுடன் கூடிய தொடுதிரை, கணினி, தலா 4 மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்களின் கற்றல் உபகரணங்களைப் பாதுகாக்க பீரோ, இருக்கைகள், ஸ்மார்ட் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
இதுதவிர விசாலமான கூட்ட அரங்கு, கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் ஒலிபெருக்கி, மேம்படுத்தப்பட்ட விளையாட்டுக் கருவிகள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
அத்துடன், மதிய உணவை மாணவர்களே தேவைக்கு ஏற்ப போட்டுச் சாப்பிடும் பஃபே முறை கொண்டுவரப்பட்டது. மாணவர்களிடையே சுகாதாரம், ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளியைப் பராமரிக்கும் பொறுப்பு அனைத்து மாணவ, மாணவியருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் இந்த பள்ளியின் தரம் பெருமளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள்
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி, 'இந்து தமிழ்' செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதற்கு முன்பு மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் பணி செய்தபோது, அப்பள்ளியை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகளில் இருந்து நிறைய அனுபவம் கிடைத்தது. அது எனக்கு பெரும் உதவிகரமாக இருந்தது.
அனைத்து பாடங்களையும் புத்தகத்தில் படிப்பதைவிட தொடுதிரை மூலம் ஒலி-ஒளி வடிவில் மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் உற்சாகமாகக் கற்கின்றனர். இணையதளத்தின் உதவியுடன் சந்தேகங்களுக்கு விடைகாண கூகுளைபயன்படுத்துகின்றனர்.
மாணவர்களின் திறனை மேம்படுத்த 'ஸ்கைப்' மூலம் பிற கல்வி நிறுவனங்களையும், கல்வியாளர்களையும் தொடர்புகொண்டு தேவையான கூடுதல் தகவலை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் இருந்தும் தகவல் பெறப்படுகிறது.
காய்கறி, மூலிகை தோட்டம்
இத்தகைய நடவடிக்கைகளால் இப்பள்ளியானது சர்வதேச தரத்துக்கு உயர்ந்துள்ளது. தனக்குத் தேவையான உணவை, சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே மாணவர்களே உணவை எடுத்துப் போட்டுச் சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவருக்கு மட்டும் சத்துணவுப் பணியாளர் உதவி செய்வர்.