இருபத்து மூன்று அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த முறைகேட்டின் முக்கியப் புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிபிசிஐடி 7 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் இருபத்து மூன்று அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
அவரிடம் நடைபெற்ற விசாரணை தொடர்பாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவல்களாவது:
23 அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளார்.
தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்தது மற்றும் விடைத்தாள்களை கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்திய இடம் ஆகியவை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பெற்ற பணத்தை ஜெயக்குமார் தனக்கு முறைகேடுகளில் உதவி செய்தோருக்கு பங்கிட்டு தந்துள்ளார்
முறைகேட்டில் ஜெயக்குமாருக்கு முக்கிய பங்கு என்றாலும் அவருக்கு தலைவராக இருப்பவர் யார் என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.