பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க மாநில அரசு இதற்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. 6ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு அறிவித்த பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு தரப்புகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசாணை வெளியிட்டார்.
இந்நிலையில் மக்களவையில் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் பி.பி.சவுத்ரி, சுதாகர் துகாரா ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியால் பதிலளித்தார். தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 2015-2016ஆம் ஆண்டுகளில் 8.1 சதவீதமாக இருந்ததாகவும், 2016-2017ஆம் ஆண்டுகளில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.