உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 26, 2018

உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்


மதுரை : கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத பாடத் திட்டங்களை மாற்ற முயற்சி எடுத்து 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.


பாடத்திட்டம் உருவாக்க அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்களை தேடிப் பிடித்தார். இது கல்வியாளர்கள், பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்தது. தவிர பிற மாநிலங்களில் பள்ளி கல்வி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வித்துறை இணை இயக்குனர்களை அனுப்பினார். அவர்களின் பரிந்துரைகளை புதிய பாடத்திட்டங்களில் புகுத்தினார்.


தமிழக மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ள 'நீட்' தேர்வில் கேட்கப்படும் 99 சதவீதம் வினாக்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் பதில் உள்ளதாக வெளிப்படையாகவே அவர் கூறி வந்தார். இதன் மூலம் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்களில் 'கியூ.ஆர். கோடு' உட்பட பல அம்சங்கள் புகுத்தப்பட்டதற்கும் உதயசந்திரனுக்கு வரவேற்பு கிடைத்தது.

என்னவாகும் பாடத்திட்டம் பணி :

இதற்கிடையே இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. உதயசந்திரனுக்கு பதில் பாடத்திட்ட செயலராக யாரையும் நியமிக்காததால், அந்த பணிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயசந்திரனை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் 'வாட்ஸ் ஆப்' முகப்பில் அவரது படத்தை வைத்துள்ளது கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகேட்பு கூட்டம்

புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை உதயசந்திரன் நடத்தினார். இதுபோன்ற கூட்டத்திற்கு துறை அமைச்சரையும் அதிகாரிகள் அழைப்பது வழக்கம். ஆனால் உதயசந்திரன் அழைக்காததால் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருந்தது. அவர் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர்.

உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பாடத்திட்டங்களில் என்ன பகுதிகள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய பாடவாரியாக நிபுணர்கள், பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டன.

1, 6, 9, பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் உதயசந்திரன் மாற்றத்தால் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் முழுமையாக பாடத்திட்டம் வெளிவரும் வரை அவர் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்றார்.

Post Top Ad