கல்வித்துறை செயலாளர்களுக்கு சம்மன் : சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை - Asiriyar.Net

Saturday, August 11, 2018

கல்வித்துறை செயலாளர்களுக்கு சம்மன் : சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கைஒன்று மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்களுக்கு புத்தகச் சுமையை ஏற்றிவிடுகின்றனஇதனால் குழந்தைகள் தங்களது எடையைக்காட்டிலும் கூடுதல் சுமையாக புத்தகங்களை சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். 


எனவே என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களை மட்டுமே நடத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் 

உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் சுமை தரக்கூடாது என்பது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது என்றார். 

வழக்கை விசாரித்த நீதிபதி, என்சிஇஆர்டி கொண்டு வந்துள்ள பாடத்திட்டம் பல்வேறு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் சிபிஎஸ்சியால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். அந்த புத்தகங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஒன்று மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் தரக்கூடாது. 

இந்த உத்தரவுகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பாடங்களும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 பாடங்களும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கூடுதல் சுமையைக் கொடுப்பதை தடுக்க வகைசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட குழந்தைகள் பள்ளி பைகள் (எடை கட்டுப்பாடு) மசோதா 2006ஐ அமல்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த கொள்ளை உள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் கொள்கையாக கொண்டுவருமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தி 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள், சிபிஎஸ்இ ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வக்கீலிடம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்கு சிபிஎஸ்இயின் வக்கீல் இதுவரை இல்லை. சிறிது கால அவகாசம் வேண்டும் என்றார். 


இதைக்கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என்று எச்சரிக்கிறேன் என்றார். அப்போது, வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, இந்த கல்வியாண்டில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். 

ஆனால், அடுத்த கல்வியாண்டுவரை சிபிஎஸ்இ இழுத்தடித்துவிடும் என்றார். இதையடுத்து, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனிடம் நீதிபதி, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார்.   அதற்கு, நாங்கள் ஜூன் மாதமே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் அனுப்பிவிட்டோம். இந்த மாதமும் நினைவுறுத்தல் சுற்றறிக்கையைஅனுப்பியுள்ளோம். 

ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தி வரும் 17ம் தேதிக்குள் சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை வரும் 17ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Post Top Ad