3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல் - Asiriyar.Net

Saturday, August 11, 2018

3890 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி நிரவல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை கவுன்சலிங் மூலம் பணி  நிரவல் செய்து மாறுதல் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங்  நடத்த ஏற்கனவே இரண்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  

இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 350  ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். 

மேலும், ஜூன் 16ம் தேதி நடந்த  கவுன்சலிங்கின் மூலம் 103 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதல் மூலம் சென்றுவிட்டனர். அதனால் மொத்தமுள்ள 4587  பணியிடங்களில் 594ஆக இருந்த காலிப் பணியிடம் மேலும் அதிகரித்து தற்போது 697 ஆக உள்ளது. அதனால் ஆசிரியர் பயிற்றுநர்கள்  எண்ணிக்கை 3890 ஆக குறைந்து  மாநிலம் முழுவதும் சமநிலையற்று காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  


மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் 15 சதவீத  காலிப்பணியிடங்களை மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப்பணியிடமாக ஒதுக்கிவிட்டு, கவுன்சலிங்  மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் கவுன்சலிங் மூலம்  மாறுதல் வழங்க இயக்குநர் அனுமதி கேட்டுள்ளார். 

அவரின்  கருத்துருவை அரசு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் மாநில  திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளபடி 3890 ஆசிரியர் பணியிடங்களில் மாநில சராசரி  காலிப்பணியிடங்களை தவிர்த்துவிட்டு அதற்கு மேற்பட்டு வரும் காலிப் பணியிடங்களையும் கவுன்சலிங் நடத்தி மாறுதல் வழங்க  அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

Post Top Ad