Corona "Booster Dose" - சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 26, 2021

Corona "Booster Dose" - சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி அறிவிப்பு

 





ஒமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில் நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஜனவரி 3ம் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும், ஜனவரி 10ம் தேதி முதல் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமிக்ரான் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகளவில் பரவக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், ஏற்கனவே போட்டுள்ள கொரானோ தடுப்பூசி பாதுகாப்பையும் மீறி, அனைவரையும் தாக்கும் அளவுக்கு இந்த வைரஸ் வீரியமிக்கது என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை பல்வேறு நாடுகளும் தீவிரப்படுத்தி உள்ளன.


இந்நிலையில், பிரதமர் மோடி நேற்றிரவு 9.45 மணி அளவில் திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: ஒமிக்ரான் வைரஸ் பரவலை கண்டு நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து அரசு, தடுப்பூசிகளை செலுத்தும் பணியை மிக விரைவாக தொடங்கியது. இதனால்தான் நம்மால் கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல முடிந்தது.


இந்தியாவில் தற்போது 141 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே போல், 61 சதவீதம் பேர் 2 டோஸ் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர். கொரோனா பரவலை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 5 லட்சம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன.  1.40 லட்சம் ஐசியூ படுக்கைகளும், குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ அல்லாத 90,000 படுக்கைகளும் தயாராக உள்ளன. 3,000க்கும் மேற்பட்ட மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. இதுவரை 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சூழலில் நாட்டு மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.


அதே சமயம், தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதிலும் மாநிலங்களுக்கு விநியோகிப்பதிலும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிகளுக்கும், உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாததால் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்ப பெற்றோர் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. அவர்களின் தயக்கத்தை போக்கும் வகையில், வரும் ஜனவரி 3ம் தேதி இருந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. அதே போல், முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி வரும் ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


* 17 மாநிலத்தில் பரவியது 437 பேருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் நேற்றிரவு நிலவரப்படி, 17 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ளது. மொத்தம் 437 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேரும்,  டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலங்கானாவில் 38, கேரளாவில் 37, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


* உலகளவில் ஒரே மாதத்தில் 1.5 லட்சம் பேர் பாதிப்பு

தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் முறையாக ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரே மாதத்தில் உலகளவில் 108 நாடுகளில் 1.5 லட்சம் பேரை இது தொற்றி உள்ளது. இதில், 26 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்காவில் தொற்று பரவல் மிகத் தீவிரமாக உள்ளது.


* 10 மாநிலங்களுக்கு ஒன்றிய நிபுணர் குழு

ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாகி வரும் மற்றும் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆய்வு செய்து, அறிவுரைகள் வழங்குவதற்காக ஒன்றிய அரசு நிபுணர் குழுவை அனுப்ப உளளது. அதன்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு இக்குழு சென்று,  3 அல்லது 5 நாட்கள் தங்கியிருந்து ஆலோசனைகளை வழங்க உள்ளது.  


* சிறுவர்களுக்கு கோவாக்சின் செலுத்த அனுமதி

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அவசரகால அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த முடியும். அந்த வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுவர்களுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தது. ஆனாலும், குஜராத்தைச்  சேர்ந்த ஜைடஸ் கேடில்லா  நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதற்கிடையே, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை 12-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், அதைத் தொடர்ந்து 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் செலுத்தி பரிசோதனை நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகளை பரிசீலித்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், கோவாக்சின் தடுப்பூசியை 12-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்துவதற்கான அவசரகால அனுமதியை நேற்று வழங்கியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களைப் போல, சிறுவர்களுக்கும் 28 நாள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தலாம்.




Post Top Ad