100 பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் தொடக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 30, 2021

100 பள்ளிகளில் ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் தொடக்கம்

 



சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களை தடுக்க மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்விவரம் வருமாறு:


சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்பட கூடிய சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த சிற்பி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை (என்சிசி) போல் இந்த திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த திட்டத்தில் உள்ள மாணவர்களை தனியாக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


அதுமட்டும் அல்லாமல் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவும் உள்ளனர். இதன் மூலம் மாணவர்களின் திறனை அதிகரிப்பதே காவல்துறையின் நோக்கமாக உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சமூகத்தில் மாணவர்களை பொறுப்புள்ளவர்களாக மாற்ற சிற்பி திட்டம் கை கொடுக்கும். சிற்பி திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்களின் திறனை வளர்க்க தேவையான உதவிகளையும் போலீஸார் செய்ய உள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண் மற்றும் காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால தொலைபேசி எண்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியபடுத்துவதோடு, அவர்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் அதுகுறித்த தகவலை போலீஸாருக்கு தெரிவிக்க சிறார்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்படும் இந்த சிற்பி திட்டம், தேசிய மாணவர் படை (என்சிசி) போல் செயல்படுத்தப்பட உள்ளது.




Post Top Ad