ஆசிரியர்களிடம், மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது - ஐகோர்ட் வேதனை - Asiriyar.Net

Sunday, May 1, 2022

ஆசிரியர்களிடம், மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிக்கிறது - ஐகோர்ட் வேதனை

 
மரியாதை செலுத்த வேண்டிய ஆசிரியர்களிடம், மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம், அது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை பங்களிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதல் வயப்பட்டனர்.உடல் ரீதியான உறவு உறவினர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம், உடல் ரீதியான உறவு வைத்தால் தான் திருமணத்துக்கு ஒப்புக் கொள்வர் எனக் கூறி, பலமுறை உறவு வைத்துள்ளார். இதில், சிறுமி கருவுற்றார்.விபரம், பெண்ணின் தாய்க்கு தெரிய வர, ஆவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 'போக்சோ' சட்டத்தின் கீழ், சிறுவனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


வழக்கை விசாரித்த சிறார் நீதி வாரியம், தவறை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மூன்று ஆண்டுகள் அரசு இல்லத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சிறுவனின் தாய், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.வெங்கடேசன்; போலீஸ் தரப்பில், வழக்கறிஞர் சுகேந்திரன்; நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் ஆகியோர் ஆஜராகினர்.


மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு:வழக்கின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும் போது, இளைய பருவத்தில் எழும் இன கவர்ச்சிக்கு, 'கிரிமினல்' வண்ணம் கொடுக்கப்பட்டு, ஒருவரை தண்டித்திருப்பது தெரிகிறது. சிறுமி கருவுற்றது தொடர்பாக, சிறுவன் தகராறு செய்ததால், முழு விஷயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


குற்றங்களில் ஈடுபடும் சிறார், கிரிமினல்கள் அல்ல; சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள். வீட்டிலும், பள்ளியிலும், அவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தினால், விரைவிலேயே அவர்களின் தவறுகளை சரி செய்து விட முடியும்.'ஸ்மார்ட் போன்''ஹார்மோன்' வளர்ச்சியில் இருக்கும் சிறுவன், சிறுமிக்கு கடுமையான தண்டனை விதிப்பதை விட, அவர்களை சீர்படுத்தும் அணுகுமுறை தேவைப்படுகிறது; அதற்கு, சிறப்பு சட்டம் தேவைப்படுகிறது.


காதல் என்ற உணர்வு புதிது அல்ல; அதற்கென நீண்ட வரலாறு உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், அது தவறுதலாக புரிந்து கொள்ளப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில், பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, 'ஸ்மார்ட் போன்' உடன் குழந்தைகள் இருந்தன.சமீபத்தில், சமூக வலைதளங்களில் வந்த வீடியோக்களில், பள்ளிகளிலும், வெளியிடங்களிலும் பொறுப்பற்ற வகையில் மாணவர்கள் நடந்துள்ள விதம் காட்டப்பட்டது.


மரியாதை செலுத்த வேண்டிய ஆசிரியர்களிடம், மாணவர்கள் நடந்து கொள்ளும் போக்கை பார்க்கும்போது, உண்மையிலேயே வேதனையாக உள்ளது.மாணவர்களுக்கு மட்டுமின்றி, சட்டத்தை அமல்படுத்துபவருக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்திய டி.ஜி.பி., சைலேந்திரபாபுவின் வீடியோ பதிவு ஆறுதலாக அமைந்தது.எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க, கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை பங்களிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அப்போது தான், நிலைமை கை மீறாமல் இருக்கும். இதில், பெற்றோருக்கும், சமூகத்துக்கும் பொறுப்பு உள்ளது.இந்த வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, முறையாக நிரூபிக்கப்படவில்லை. அதுகுறித்து, சிறார் நீதி வாரியமும், சட்டப்படி ஆராயவில்லை. சம்பவம் நடந்த போது, சிறுமியின் வயது 18க்கு குறைவாக இருந்தாலும் கூட, சட்டப்படியான நடைமுறையை பின்பற்றியிருக்க வேண்டும்; ஆனால், முறையாக பின்பற்றவில்லை.எனவே, திருவள்ளூர் சிறார் நீதி வாரியத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Post Top Ad