2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - Asiriyar.Net

Friday, May 6, 2022

2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

 




பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கிய 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 10ம்வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.


இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த கணேசன், தொடர்ந்து இந்த ஆண்டும் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வந்துள்ளது. ஹால்டிக்கெட்டுகளை சரி பார்த்தபோது, மாணவன் கணேசன் கடந்த கல்வி ஆண்டிலேயே 10ம் வகுப்பில் தேர்வு பெற்றது தெரியவந்தது.ஏற்கனவே தேர்ச்சி அடைந்துள்ள மாணவன் தொடர்ந்து அதே வகுப்பில் படித்து வந்ததும், அவர் மீண்டும் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியம் என்றும் தெரியவில்லை.


இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, 10ம் வகுப்பு அனைத்து பாட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி விளக்கம் கடிதம் பெற்றுள்ளார். அதனை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், 3 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவனுக்கு டிசி வழங்கப்பட்டு உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




Post Top Ad