திறன் வழி தேர்வின் வாயிலாக, கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநிலஅரசுகளின் சார்பில், பல்வேறு திட்டங்களில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.சிறுபான்மையின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்,பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு, தனியாக கல்வி உதவி தொகை திட்டங்கள் உள்ளன. அதேபோல், அனைத்து வகைமாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு வழியாகவும், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, என்.எம்.எம்.எஸ்., எனப்படும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும்.திறனறி தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம் தோறும் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து கொண்டிருக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வி உதவி தொகையை தடையின்றி பெற, தங்களின் விபரங்களை புதுப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
இந்தப் பணிகளை, பிப்., 10ம் தேதிக்குள் முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.