மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு 5 மற்றும் 8- ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்திற்கு இது முற்றிலும் எதிராக உள்ளது. மேலும் 5 மற்றும் 8வது படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களுக்கு அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்த ஒரு தெளிவான அறிவிப்பு இல்லை. எந்த மாநிலத்திலும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே இம்முறை நடைபெறவுள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி, மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியைத் தரமானதாக வழங்க வேண்டும் என்பதற்காகவே பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும் என்றார். விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்தனர்.
1. எதன் அடிப்படையில் தமிழக அரசு இந்தத் தேர்வை கொண்டு வந்துள்ளது?
2. அனைவருக்கும் கட்டாயக்கல்வி சட்டத்துக்கு எதிராக இந்த பொதுத்தேர்வு இருக்கிறதே?
3. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?
4. இந்தப் பொதுத்தேர்வை அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்துமா? பள்ளிக்கல்வித்துறை நடத்துமா?
5. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா?
6. மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன?
7. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்?