2000 ரூபாய் நோட்டு இனி ஏடிஎம்மில் கிடைக்காது என்றும் டெபாசிட் மெஷின்களில் டெபாசிட் செய்யவும் முடியாது என்றும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய வண்ணங்களில் 100, 200, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது ரிசர்வ் வங்கி. புதிய நோட்டுகள் புழக்கத்தில் வந்த பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ வங்கி குறைத்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் குறைத்து வந்தது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டை தடை செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாயின. இந்தத் தகவலை ரிசர்வ் வங்கி மறுத்தது. ஆனால் சில நாட்களாகவே 2000 ரூபாய் நோட்டுகளை தவிர்த்து குறைந்த மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் கிடைத்தன. தனியார் வங்கிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் ரூ.2,000 நோட்டுகளை வழங்குவதில்லை என வாடிக்கையாளர்களிடம் மட்டும் தெரிவித்தன.
இனி, 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றும் சிடிஎம் எனப்படும் டெபாசிட் இயந்திரங்கள் மூலம் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது என்றும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது என அறிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், "2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் பயன்பாட்டில் இருப்பதால் மற்ற நோட்டுகள் புழக்கம் குறைவாக இருக்கிறது. குறிப்பாக 200 ரூபாய் நோட்டுகள் சரியாக யார் கைக்கும் சென்று சேரவில்லை. அதை அதிகப்படுத்துவதற்காகவும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் எடுத்துவிட்டு வங்கிக்கு வந்து சில்லறை கேட்கின்றனர். அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காகவே நேரடியாக ஏடிஎம்களில் குறைந்த மதிப்பிலான நோட்டுகளை டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார்.
200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள்
இதுதொடர்பாக இந்தியன் வங்கியின் டிஜிட்டல் பேங்கிங் பிரிவை (DBD) ஏசியாவில் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டோம். அந்தப் பிரிவிலிருந்து இதுதொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், 2,000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து குறைக்க அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டாம் எனவும், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முற்றிலும் நிறுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேஷ் டெபாசிட் மெஷின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது என்பது குறித்த எந்த விவரமும் அதில் இடம்பெறவில்லை.