பள்ளி மாணவர்களிடம் நல்ல மதிப்பெண் கிடைக்க நூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வில் 56 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் மவு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் ஒருவர் தேர்வு அறையில் எப்படி காப்பியடிப்பது என்றும், தேர்வுகளில் முறைகேடு செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும் அவர் 'தேர்வு அறையில் நீங்கள் காப்பி அடிக்கலாம், விடைத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் எனது நண்பர்கள். ஒரு வினாவையும் விடாது எதையாவது எழுதி வைத்துவிட்டு விடைத்தாளுடன் 100 ரூபாய் இணைத்து விடுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு கண்மூடித்தனமாக மதிப்பெண்கள் அளிப்பார்கள்' என பேசியுள்ளார்.
இதை மாணவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.