Globe Teacher Award 2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 2, 2018

Globe Teacher Award 2018




உலக அளவில் கனவு ஆசிரியர்

அகதி மாணவர்களுக்காக,  அகதி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க 35 மொழிகளை பேசுவதற்குக் கற்றுக்கொண்ட ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது 7 கோடி பெற்ற லண்டன் நகரைச் சேர்ந்த #அண்ட்ரியா #ஸாஃப்ராகெள (Andria Zafirakou)

35 தாய்மொழி புலமை, மாணவர்களைக் காப்பாற்றிய தைரியம், பாக்ஸிங் கிளப் - உலகின்  அற்புத ஆசிரியை!

”எங்கள் மாணவர்களில் பலரும் மிகவும் சவாலான சூழ்நிலையில் சேரியில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு மிகவும் கடினமானது. ஆனால், இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வீட்டில் அவர்களுக்கு எத்தகைய சூழ்நிலை இருந்தாலும், வாழ்வில் எதை இழந்திருந்தாலும், எங்கள் பள்ளியை அவர்களுடையதாக நினைப்பார்கள். காலை 6 மணிக்குப் பள்ளியைத் திறப்பதாகச் சொன்னால், அவர்கள் 5 மணிக்கே நீண்ட வரிசையில் வந்து நிற்பார்கள். அதுதான் அவர்களின் தனித்துவம்”

சமீபத்தில், துபாயில் மிகப் பிரமாண்டமாக நடந்த ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர் 2018’ (Globe Teacher Prize 2018) விருது பெற்ற லண்டன் நகரைச் சேர்ந்த அண்ட்ரியா ஸாஃப்ராகெள (Andria Zafirakou), மேடையில் சொன்ன வார்த்தைகள் இவை.

தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, நார்வே, பெல்சியம், இந்தியா  உள்ளிட்ட 173 நாடுகளிலிருந்து வந்த 30,000 போட்டியாளர்களை வென்று, இந்த விருதைப் பெற்றிருக்கிறார் அண்ட்ரியா. அப்படி என்ன சாதித்திருக்கிறார் இவர்?

லண்டனில் உள்ள ஒரு சிறிய பகுதி, பிரண்ட் (Brent). பொருளாதாரத்திலும் சமுதாய வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கிய அகதி  குடும்பங்கள் வசிக்கும் சேரி பகுதி இது. இந்தப் பகுதியில் ரெளடி கும்பல்களின் ஆதிக்கம் அதிகம். பள்ளி பேருந்துகளிலும் ஏறி, தங்கள் கும்பலில் சேருமாறு மாணவர்களை ‘வேலை’க்கு எடுக்கும் முயற்சி செய்வார்கள். 35 மொழிகள் பேசும் மக்கள் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். எனவே, அந்த மாணவர்களை நன்கு புரிந்துகொள்வதற்காக, 35 மொழிகளிலும் பேசுவதற்குக் கற்று வெற்றிக்கொண்டார் அண்ட்ரியா.





அண்ட்ரியாவின் ஒவ்வொரு வாரவிடுமுறை நாட்களும் அகதி முகாம்தான். அனைத்து வீடுகளுக்கும் சென்று அவர்களின் தாய்மொழியில் அன்பாக பேசி, கல்வியின் அ௫மையை எடுத்து சொல்வதில் ஒ௫ அன்பான ஆசிரியர்.

ஆகையினால்தான் பெற்றோர்கள் கஷ்டமான சூழ்நிலையிலும் ஆசிரியையின் அனபுக்கு கட்டுபட்டு ரெளடிகளின் மிரட்டல்களூக்கு பயப்படாமல்   குழைந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கொண்டி௫க்கின்றார்கள்.

அண்ட்ரியாவின் ஒவ்வொரு காலையும், பள்ளிக்கு வெளியே நின்று, வருகைதரும் மாணவர்களுக்குப் பல மொழிகளில் காலை வணக்கம் சொல்வதில் ஆரம்பிக்கும். ‘அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்கூல்’ (Alperton Community School) என்ற பள்ளியில், கலை மற்றும் நெசவு ஆசிரியராக (Arts &; Textiles Teacher) பணியாற்றுகிறார்.

“என்னால் ஆசிரியர் பணியைத் தவிர்த்து மற்ற துறைகளில் வேலை பார்ப்பது பற்றி நினைத்தும் பார்க்க முடியவில்லை. இந்தக் குழந்தைகளுடன் இருப்பதுதான் என் சந்தோஷம். இவர்கள் என் குழந்தைகள். கலை என்பது மிகவும் வலிமையான பாடம். அது, மாணவர்களுக்கு மொழிகளைத் தாண்டிய தெளிவை உண்டாகும். கலைக்கு மொழியை மிஞ்சும் சக்தி இருக்கிறது. கலையின் மூலம், மாணவர்களின் திறமையை, நம்பிக்கையை வளர்க்க உதவும். அவர்கள் வாழ்வில் ஏதோ ஒன்றைச் சாதிக்க தூண்டுகோலாக இருக்கும் என நம்பிக்கிறேன்” என்கிற அண்ட்ரியா குரலில் நேசம் நிறைந்துள்ளது.

அந்தப் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் ரெளடி கும்பல், பள்ளி வாகனத்தில் ஏறி, மாணவர்களை தங்களுடன் சேருமாறு வற்புறுத்தும்போது, காவல்துறை துணையுடன் அப்புறப்படுத்துவது அண்ட்ரியாதான்.

 அதுமட்டுமா? எல்லா நேரமும் மாணவர்களின் காவலுக்கு தான் இருக்க முடியாது என்ற நிதர்சன உண்மையை உணர்ந்த அண்ட்ரியா, தன் மாணவர்களுக்கு ‘பாக்ஸிங் கிளப்’ ஒன்றையும் அமைத்து, பயிற்சி அளித்துவருகிறார்.

பழைமைவாதம் நிறைந்த அந்தப் பகுதியில், பெண்கள் மட்டும் விளையாடும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, பள்ளி கால அட்டவணையை அதற்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார் அண்ட்ரியா. அந்தப் பள்ளியின் பெண்கள் கிரிக்கெட் அணி, பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றிருப்பது, அண்ட்ரியாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

மற்றொரு முக்கிய பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதுதான் அது. தன் ஒருவரின் முயற்சியால் மட்டுமே பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது என உணர்ந்து, அந்தப் பள்ளியிலேயே ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார்.. இந்தப் பயிற்சிகள், ஆசிரியர்களுக்கான திறமைகளை வளர்ந்துகொள்வதற்கல்ல; அந்தப் பணியில் முழு ஈடுபாட்டை வளர்ந்துகொள்வதற்காக.

“என் மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அதனை நடத்திவைப்பதற்கு ஓர் ஊன்றுகோலாக இருப்பேன். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருக்கும் முழு திறமையை வெளிக்கொண்டுவருவதுதான் என் இந்த வாழ்வுக்கான அர்த்தமாக நினைக்கிறேன்.” என நெகிழ்ந்து கூறுகிறார் அண்ட்ரியா.

Post Top Ad